டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் அபரிமிதமான வளர்ச்சி: 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு-திரவுபதி முர்மு!
நேற்று உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று பெருமிதத்துடன் கூறினார்.
By : Karthiga
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசின் கடந்த 10 ஆண்டு கால திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக பல்வேறு துறைகளில் அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் குறித்து அவர் உரையாற்றினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் எதிர்பார்த்து இருந்த ஏராளமான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதில் முக்கியமானது ராமர் கோவில். பல நூற்றாண்டுகளாக மக்களிடையே கனவாக இருந்த ராமர் கோவில் இன்று நனவாக இருக்கிறது. கலாச்சார வரலாற்றில் நூற்றாண்டுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சில மைல்கற்கள் உள்ளன. இந்திய வரலாற்றிலும் இது போன்ற பல மைல்கற்கள் நடந்துள்ளன. ஜனவரி 22 ஆம் தேதி அத்தகைய மைல் கல்லை நாடு கண்டது பல நூற்றாண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு பால ராமர் இப்போது அயோத்தியில் ஒரு பெரிய கோவிலில் வீற்றிருக்கிறார் .
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 170 வது சட்ட பிரிவு நீக்குவது குறித்து அச்சங்கள் இருந்தன. ஆனால் இன்று அதை நீக்கி வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது .காஷ்மீரில் கடந்த காலங்களில் காணப்பட்ட வேலை நிறுத்தங்களின் அமைதிக்கு பதிலாக வர்த்தகங்களின் அதிர்வு இருப்பதால் அமைதி மற்றும் பாதுகாப்பு சுழல் உள்ளது. வடகிழக்கில் கிளர்ச்சி சம்பவங்கள் சரிந்துள்ளன. முத்தலாக்குக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்றி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் தற்போது சரியான திசையில் சரியான வேகத்தில் பயணிக்கிறது. பலவீனமான ஐந்து நாடுகள் பட்டியலில் இருந்து உலகில் ஐந்து வலுவான பொருளாதர நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் சுமந்து 25 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு வெளியே வந்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்தியாவில் வணிகம் செய்வது எளிதாக்குவதற்கும் உகந்த சூழலை உருவாக்குவதற்கும் அரசு தொடர்ந்து உழைக்கிறது. சிறு தொழில் முனைவோர் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறையை வலுப்படுத்த அரசு முழு உறுதிப்பாட்டுடன் உழைத்து வருகிறது. முன்பு நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில் தற்போது நான்கு சதவீதத்துக்கு உள்ளே அதை கொண்டு வந்திருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவில் வாழ்க்கையையும் வணிகத்தையும் மிகவும் எளிதாக்கியுள்ளது. இன்று முழு உலகமும் இதை இந்தியாவின் மாபெரும் சாதனையாக அங்கீகரிக்கிறது.
வளர்ந்த நாடுகளில் கூட இந்தியாவைப் போல் டிஜிட்டல் முறை இல்லை. உலக டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இது அபரிமிதமான வளர்ச்சியை காட்டுகிறது. கடந்த மாதம் மட்டும் யு.பி.ஐ மூலம் 1200 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இது ரூபாய் 18 லட்சம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய பரிவர்த்தனையாகும் . நாடு முழுவதும் புதிதாக 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் 315 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் எம்.பி.பி.எஸ் இடங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலான காத்திருப்புக்கு பின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் கிசான் சம்மான் நிதியாக விவசாயிகள் இதுவரை ரூபாய் 2.8 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளனர். வங்கிகளில் விவசாயிகளுக்கு எளிதாக கடன் வழங்குவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு துறைகளில் இந்தியா தற்போது சாதனை அளவான முதலீடுகளை பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 3.75 லட்சம் கிலோமீட்டர் புதிய சாலைகள் கிராமப்புறங்களில் போடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் 90 ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கிலோ கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. பழங்குடியினரும் வளர்ச்சி அடைந்துள்ளனர் .இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வலிமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் முயற்சியால் பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்.
SOURCE :DAILY THANTHI