"நேருவின் இரண்டு பெரும் தவறுகள்" மக்களவையில் அமித்ஷா கடும் தாக்கு!
முன்னாள் பிரதமர் நேருவின் இரண்டு பேரும் பிழைகளால் காஷ்மீர் மக்கள் பல்லாண்டுகளாக பாதிக்கப்படுவதாக அமித்ஷா குற்றம் சாட்டினார்.

By : Karthiga
நாடாளுமன்ற மக்களவையில் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் மீது இரண்டு நாட்களாக விவாதம் நடந்தது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பதிலளித்தார். அவர் பேசியதாவது:-
கடந்த 70 ஆண்டுகளாக துரோகம் இழைக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நீதியும் உரிமைகளும் அளிப்பதற்காக இரண்டு மசோதாக்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த காஷ்மீரி சமூகத்தினருக்கு சட்டசபையில் இரண்டு இடங்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படும். முதல்முறையாக எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினருக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்படும் .காஷ்மீர் மறுசீரமைப்புக்கு பிறகு ஜம்முவில் தொகுதிகள் எண்ணிக்கை 37 இலிருந்து 43 ஆகவும் காஷ்மீரில் தொகுதிகள் எண்ணிக்கை 46 இல் இருந்து 47 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு காஷ்மீரும் நமது பகுதி என்பதால் அங்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தொடுத்த மூன்று போர்கள் காரணமாக 41,884 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. அவர்களுக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கும் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் அளிக்க இம்மசோதாக்கள் வகை செய்கின்றன. இங்கே பயன்படுத்தப்பட்ட நேருவின் பிழை என்ற வார்த்தையை நான் ஆதரிக்கிறேன். நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவரது இரண்டு பெரும் பிழைகளால் காஷ்மீர் மக்கள் பல்லாண்டு காலம் பாதிக்கப்பட்டுள்ளனர் .
1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நமது ராணுவம் வெற்றி பாதையில் சென்று கொண்டிருந்தது .பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபை அடைந்தபோது நேரு திடீரென போர் நிறுத்தம் அறிவித்தார் .இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. மூன்று நாட்கள் கழித்து போர் நிறுத்தம் அறிவித்து இருந்ததால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும் போர் நிறுத்தம் அறிவித்தது தவறு என்று பின்னாளில் நேருவே தெரிவித்தார். அது நேருவின் தவறல்ல. பிழை.
மற்றொரு பிழை காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதி நிலத்தை இழந்து விட்டோம். இது வரலாற்று பிழை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடு தான் .எனவே அது போய் தான் தீர வேண்டும். அதை நீக்குவதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை. மோடிக்கு தைரியம் இருந்ததால் பிரிவை நீக்கினார். காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களால் இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்குள் காஷ்மீரில் பயங்கரவாத சம்பவமே இல்லாத நிலையை உருவாக்குவது தான் மத்திய அரசின் இலக்கு.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார். 2026 ஆம் ஆண்டுக்குள் பயங்கரவாத சம்பவமே இல்லாத நிலை உருவாக்கப்படும். காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கெடுதல் செய்து அவர்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த ஒரே கட்சி. பிரதமர் மோடி ஏழை குடும்பத்தில் பிறந்து பிரதமர் ஆனவர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் வேதனை அவருக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :Indiandefencenews.com
