பிரதமர் மோடி தலைமையின் கீழ் கொரோனாவை சமாளிக்க உலக நாடுகளுக்கு இந்தியா உதவியது - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையின் கீழ் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளும் கொரோனாவை சமாளிக்க இந்தியா உதவியதாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதத்துடன் கூறினார்.
By : Karthiga
உத்தரகாண்டில் ரூபாய் 180 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் நான்கு சுகாதாரத் துறை திட்டங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற அவர் பேசும்போது கூறியதாவது:-
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது பிரதமர் மோடி தலைமையில் இந்தியா நாட்டில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதுமட்டுமின்றி 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் அந்த நாடுகளும் கொரோனாவை எதிர்த்து போரிட உதவியது. இந்த சிறப்பான பங்களிப்புக்காக சர்வதேச அளவில் இந்தியா பாராட்டப்பட்டது. உதாரணமாக தவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் பில்கேட்ஸ் இந்தியாவை வெகுவாக பாராட்டி இருந்தார். சர்வதேச அளவில் தடுப்பூசி டோஸ் 16 ,18 ,20 டாலர் என விற்பனையாகி வந்தபோது நாம் 78 நாடுகளுக்கு வெறும் மூன்று டாலருக்கு ஏற்றுமதி செய்தோம்.
நம்மை பொறுத்தவரை ஆரோக்கியம் என்றால் சேவை தான். வர்த்தகமோ வணிகமோ அல்ல .ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற நமது மரபுக்கு ஏற்ப இந்தியாவின் செயல்பாடுகள் இருந்தன. மோடியின் தலைமையில் சுகாதாரத்துறையுடன் முதல் முறையாக வளர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது . சுகாதாரத் துறையில் ஒரு முழுமையான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது. நமக்கு மருத்துவமனைகள் தேவை என்றால் அதை திறம்பட வழிநடத்த டாக்டர்களும் வேண்டும். அதற்கு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதில் உள்ள இடங்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் வெறும் 56,000 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 13 இலட்சமாக அதிகரித்து இருக்கிறது . இதேபோல மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் 350 இலிருந்து 664 ஆக உயர்ந்துள்ளது. ஏன் ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையும் 6-லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு புதிய இந்தியா உருவாகிறது. அதில் குறிப்பிடத்தக்க பங்கை வதிக்கும் மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்றாகும். இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.