10,000 நேரடி வேலை வாய்ப்பு.. சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்.!
10,000 நேரடி வேலை வாய்ப்பு.. சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்.!
By : Kathir Webdesk
தொழில் துறைக்காக அமைக்கப்படும் சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கோவை-கொச்சி தொழில் வழித்தடத் திட்டத்தின்கீழ், 1800 ஏக்கரில் ரூ .10,000 கோடிக்கு மேலான முதலீட்டில் பாலக்காட்டில் ஒருங்கிணைந்த உற்பத்தி கிளஸ்டர்-ஐ.எம்.சி அமைக்கப்பட உள்ளது. இதனால். 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசு மதிப்பிடுகிறது.
சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தை, சேலம் வழியாக, கோவைக்கும், அங்கிருந்து கொச்சிக்கும் விரிவுபடுத்த தேசிய தொழில்துறை மேம்பாடு மற்றும் அமலாக்க அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொழில் வழித்தடத்தில் அமையப்போகும் 2 ஒருங்கிணைந்த உற்பத்தி கிளஸ்டரில் ஒன்று சேலம், மற்றொன்று, கேரள மாநில எல்லையில் உள்ள பாலக்காடு. பெங்களூரிலிருந்து ஒசூர், சேலம், கோவை, பாலக்காடு வழியாக கொச்சிக்கு இந்த தொழில் வழித்தடம் செல்லப்போகிறது.
ஒருங்கிணைந்த உற்பத்தி கிளஸ்டர் அமைப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று அங்கு 2000 ஏக்கர் மதிப்புள்ள நிலம் தேவை என்பது. ஆனால் கேரளாவிற்கு இதில் சலுகை தரப்பட்டுள்ளது. அங்கு, 1800 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது. கண்ணம்ப்பரா, பாலக்காடு, உழலபதி மற்றும் புதுச்சேரி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இதற்கான நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
ஒருங்கிணைந்த உற்பத்தி கிளஸ்டர் (ஐ.எம்.சி) பாலக்காட்டை மையமாகக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 100 கி.மீ நீளத்திற்கு இருக்கும். இதேபோல சேலத்திலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் தொழில்கள் குவியும்.கிளஸ்டர் பகுதியில், எலக்ட்ரானிக்ஸ், ஐடி, உணவு பதப்படுத்துதல் மற்றும் பாரம்பரிய தொழில்கள் பெருகும் வாய்ப்பு உள்ளது. தளவாட பூங்கா, கிட்டங்கி மற்றும் குளிர்சாதன சேமிப்பு கிட்டங்கிகள் அமையும் வாய்ப்பு உள்ளது.
கொச்சி துறைமுகத்திற்கு அருகாமையில் இந்த கிளஸ்டர் அமைய இருப்பதால், நிறைய தொழில்கள் வர வாய்ப்பு உள்ளது. நேரடியாக சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.