Kathir News
Begin typing your search above and press return to search.

கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ - கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!

கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ - கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!

கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ - கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Aug 2019 5:36 PM IST


கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் அவர்களது, கோவை மக்கள் சேவை மையம் & Dream zone நிறுவனம் சார்பில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக "தேசிய கைத்தறி தினத்தை" முன்னிட்டு நடைபெற்று வரும் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு விழா இவ்வருடமும் சிறப்புற நடந்து முடிந்துள்ளது.


தேசிய கைத்தறி தினம் வரலாற்று பின்னணி:


நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.


இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக 2015, ஆகஸ்ட் 7ஆம் தேதி, தரமான கைத்தறிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் 'இந்திய கைத்தறி முத்திரையை' அறிமுகம் செய்து, 'பிரயாஸ்' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இத்தினத்தில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அனுபவம் மிக்கவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.


கோவையில் கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ:


கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி கைத்தறி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் இளைஞர்கள் மத்தியில் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை கல்லூரிகளில் ‘ஃபேஷன் ஷோ’ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் பா.ஜ.க தமிழகப் பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் ஒருங்கிணைக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முதல் நோக்கம். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும் இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாணவிகள் முற்றிலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கைத்தறியிலான தாவணி, சேலை போன்ற ஆடைகளே அணிந்து வரவேண்டும். அணிவகுப்புக்குப் பின்னர் கைத்தறி குறித்த பொதுஅறிவுக் கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் வெற்றிப் பெறுபவர்களில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் இரண்டு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதியாக கோவை மாவட்டத்தின் கல்லூரிகளிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். கைத்தறி ஆடைகள், நெசவாளர்கள் என இதுகுறித்த விழிப்பு உணர்வை இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு 2019 :


தேசிய கைத்தறி தினத்தின் முக்கியத்துவத்தை, மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கும் நோக்கில், ஆடை அணிவகுப்பு போட்டி இந்த வருடம் கோவையில் 53 கல்லூரிகளில் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கல்லூரியிலும், மாணவ-மாணவிகளுக்கான அணிவகுப்பு நடத்தப்பட்டு அதில் தேர்வான ஒரு மாணவர் அல்லது மாணவி இறுதி சுற்றில் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு கல்லூரியையும் இந் நிகழ்வில் பங்கேற்க செய்ய திருமதி. வானதி சீனிவாசன் அவர்களது கோவை மக்கள் சேவை மையத்தின் தன்னார்வலர்கள் இணைப்பு பாலமாக செயல்பட மாணவ மாணவியரை Dream zone நிறுவனத்தை சேர்ந்த திரு.கணபதி, திரு.ஜான், திரு. சுதாகர் மற்றும் பல கைதறி வல்லுனர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். PSG கல்லூரியில் நடைபெற்ற இறுதி நாள் விழாவில் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் தலைமை ஏற்க, கல்லூரி முதல்வர் Dr. பிருந்தா அவர்களின் வரவேற்புரையுடன், திரைபட நடிகை. திருமதி. பூர்ணிமா பாக்யராஜ் சிறப்பு விருந்தினராகவும், கௌரவ விருந்தினர்களாக திருமதி. ராதிகா ( தாரகராம் சில்க்ஸ்) மற்றும் ட்ரீம்ஜோன் நிறுவத்தின் தேசிய தொழில்நுட்ப வல்லுனர் திரு. பூபாலன் ஆகியோரும், நடுவர்களாக திருமதி. லதா காளிங்கராயன், பிரியா மூர்த்தி, திருமதி. ஜெயந்தி ஆகியோர் பங்கேற்று பரிசளிப்பு செய்தார்கள்.


விருதுகளும், வெகுமதியும்:


இறுதியில் நடைபெற்ற அணிவகுப்பில் 84 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் முதலாவதாக வந்த அஜய் கிருஷ்ணா என்ற மாணவர் ( ஹிந்துஸ்தான் கலை கல்லூரி) கைத்தறி மஹாராஜா என்ற பட்ட சான்றிதழுடன் ரொக்கப் பரிசும், பூவரசன் என்ற மாணவர் ( ஜெயந்திர சரஸ்வதி கல்லூரி) கைத்தறி அரசன் என்ற பட்டமும் ரொக்கமும் , தேவன் தாஸ் ( PSG Arts) என்ற மாணவன் கைத்தறி இளவரசன் பட்டமும் ரொக்க பரிசும் பெற்றார்கள்.


கைத்தறி மகாராணியாக மித்ரா என்ற ( SNS கல்லூரி) மாணவியும், அரசியாக பவதாரணி (PSG Art's) என்ற மாணவியும், இளவரசியாக முத்து லக்ஷ்மி ( Hindustan Art's) என்ற மாணவியும் பட்டமும், ரொக்க பரிசும் பரிசும் பெற்றனர். ஆறுதல் பரிசை ஹரீஷ் (அரசு கலைக் கல்லூரி), ஆகாஷ் ( நேரு கலைக் கல்லூரி), ஸ்நேகா( RVS கல்லூரி, கிருத்திகா ( சங்கரா கலை கல்லூரி) ஆகிய மாணவ மாணவியர் பெற்றனர். இதில், பாரம்பரிய கைத்தறி உடைகளை அணிந்து கல்லூரி மாணவர்கள் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெசவாளர்கள் வாழ்வை உயர்த்தும் வகையிலும், கைத்தறி குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். கைத்தறி ஆடைகளை தயாரிக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் கைத்தறி ஆடைகளை உடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


நாம் பயன்படுத்தும் ஆடைகளில் 30 சதவீதம் கைத்தறி ஆடை இருக்க வேண்டும். கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்ய மோடி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறி ஆடைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் இந்த நிகழ்ச்சியை கடந்த மூன்று பெறுப்பேற்று நடத்தி வரும், பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள். கலாச்சாரத்தை சீர்குலைக்கும் அந்நிய ஆடை அணிவகுப்பு மோகத்தை ஒழித்து, நம் பாரம்பரிய கைத்தறி தொழிலார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வானதி சீனிவாசன் மேற்கொண்டு வரும் முயற்சி இன்றைக்கு பலதரப்பட்ட மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News