வேண்டிய வரம் அருளும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலன்!
சூரியன் சந்திரன் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாக திகழ்வது வேங்கடம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவிலாகும்.
By : Karthiga
கலியுகத்தின் தொடர்ச்சியில் சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் தவம் இருந்து வந்தார். ஆனால் அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து போர்ச்சூழலும் அதர்மமும் தலை தூக்கியதால் அமைதி வேண்டி தென்னாட்டுக்கு பயணம் ஆனார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார். அப்போது இப்பகுதி பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் எனும் வனப்பகுதியாக இருந்தது. வனத்திற்குள் சடமர்ஷனர் அலைந்து திரிந்த போது வெப்பம் தாளாமல் தவித்தார். அப்போது அங்கே தென்கரை ஓரமாக ஓடிய நீரூற்று தென்பட்டது .அதில் தன் கால்களை நினைத்து வெப்பத்தை தணித்தார்.
பின்னர் அந்த நீரூற்று ஓடிய பாதையில் பயணம் செய்தார். அந்த நீரூற்று பாதை வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாக காட்சி தந்ததால் அங்கேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினார் .அந்த மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த திருமால் தாயாரோடு அவருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த மகரிஷி இறைவா இந்த உலகத்தை காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி அருள வேண்டும் என்று கேட்டார். அதன்படியே அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார். பின்னர் மகரிஷி இந்த இடத்தில் நின்றகோலத்திலும் கிடந்த குலத்திலும் நிரந்தரமாய் தங்கி இருந்து அடியவர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும் என்று கேட்டார்.
அதன்படியே நின்று கோலத்தில் ருக்மணி சத்யபாமா உடனாகிய வேணுகோபாலராகவும் கிடந்த கோலத்தில் ஆதிசேஷனின் படுக்கையில் பள்ளி கொண்ட ராமராகவும் காட்சியளிக்கிறார். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் இத்திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணி நினைவாக இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என அழைக்கப்பட்டது.இதுவே மருவி தற்பொழுது வெங்கடாம்பேட்டை என அழைக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் வெங்கடாப்பேட்டை உள்ளது. சென்னைக்கு தெற்கு 215 கிலோமீட்டர் தொலைவிலும் வடலூருக்கு வடக்கே ஏழரை கிலோமீட்டர் தூரத்திலும் கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் கோபுர வாசலை கடந்ததும் பலிபீடம் அதன் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. நின்று கைகட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசனக் கோலத்தில் இந்த கருடாழ்வர் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் மடங்கி நிற்க இடக்கையில் நாகம் சுற்றி தொடை மீது படமெடுத்து உள்ளது காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகிறார். இது ஒரு அபூர்வ கோலமாகும்.