ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! எடப்பாடியாரின் அடுத்த அஸ்திரம்!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! எடப்பாடியாரின் அடுத்த அஸ்திரம்!

By : Mohan Raj
ரேஷன் கடை பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5000 லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க அரசு பல்வேறு சலுகைகள், திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு அதிரடி அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் 21 ஆயிரத்து 600 விற்பனையாளர்கள், 3 ஆயிரத்து 800 எடையாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசுதரப்பு தெரிவிக்கிறது.

இதன் அடிப்படையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5000 லிருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்படுகிறது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.8,600-ரூ.29,000 வழங்கப்படும். மேலும், கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.4,250 லிருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.7,800-ரூ.26,000 வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசிடம் ஊதிய உயர்வு கோரி வந்த ரேஷன் கடை பணியாளர்கள் தரப்பு மிகுந்த மகிழ்சியடைந்துள்ளது.
