பொருளாதாரத்தின் அடித்தளத்தை கடந்த 9 ஆண்டுகளாக வலுப்படுத்தினோம் - பிரதமர் மோடி தகவல்!
கடந்த 9 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தை மத்திய அரசு வலுப்படுத்தியது என்று பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி இணைய வழி கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்று பொருளாதாரம் தொடர்பான இணைய கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வங்கி துறையின் பலன்கள் அதிகபட்ச மக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை. கொரோனா காலத்தில் மத்திய அரசிடம் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் பெரும் உதவி பெற்றுள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி பிணையில்லா உத்தரவாத கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் அவர்களை அணுகி தேவையான கடனை அளிக்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியாவை சந்தேகத்துடன் உலகம் பார்த்தது.
இந்திய பொருளாதார பட்ஜெட் , இலக்குகள் ஆகியவை தொடர்பான விவாதங்கள் கேள்விக்குறியுடன் தொடங்கி கேள்விக்குறியாகவே முடிவடையும். கடந்த 9 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்தின் அடித்தளத்தை மத்திய அரசு வலுப்படுத்தியது. ஆனால் இன்று இந்தியா புதிய திறன்களுடன் நடைபெற்று வருகிறது. நிதி துறையில் இருப்பவர்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. இந்தியா வளமான நிதி நடைமுறையை கொண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி வங்கிகள் லாபத்துடன் இயங்குகின்றன. உலக பொருளாதாரத்தின் பிரகாசமான இடமாக இந்தியா அழைக்கப்படுகிறது.
கடந்த நிதி ஆண்டில் மற்ற நாடுகளை விட அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை எடுத்துள்ளது. உற்பத்தி துறையில் அதிக முதல் இடுகைத்துள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை பெற விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இளைஞர்களுக்கு வங்கி உத்தரவாதம் இல்லாமல் ரூபாய் 20 லட்சம் கோடிக்கு மேற்பட்ட முத்ரா கடன்கள் அளிக்கப்பட்டன. உள்ளூர் தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன . நமது ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது . தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் .இந்த ஆண்டு பட்ஜெட்டில் மூலதன செலவுக்கு ரூபாய் 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. மத்திய அரசை போல் தனியார் துறையும் முதலீட்டை அதிகரித்தால் நாட்டுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.