பிப்ரவரி 17-ஆம் தேதி விண்ணில் பாய இருக்கும் வானிலை செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி.எஃப் - 14!
வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தவுள்ளது.
By : Karthiga
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக 'இன்சாட் -3-டி.எஸ்' என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜி. எஸ் .எல் .வி எஃப் 14 ராக்கெட்டில் பொருத்தி வருகிற 17-ம் தேதி மாலை 5:30 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 'கவுண்டவுன்' வருகிற 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டில் 16வது ராக்கெட் என்ற பெருமையை இது பெறுகிறது. மத்திய அரசின் பூமி அறிவியல் அமைச்சகம் இதற்கு நிதி வழங்கி உள்ளது . இந்த செயற்கைக்கோளின் முதன்மை நோக்கங்கள் என்பது பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க முடிவதுடன் வானிலை முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிறமாலை சேனல்களில் கடல் கண்காணிப்பு மற்றும் அதன் சுற்றுச்சூழலை மேற்கொள்ள முடியும். வளிமண்டலத்தின் பல்வேறு வானிலை பாராமீட்டர் தகவல்களையும் வழங்கும். அத்துடன் தரவு சேகரிப்பு தளங்களில் இருந்து தரவு சேகரிப்பு மற்றும் தரவு பரப்புதல் திறன்களையும் வழங்கும்.
அத்துடன் செயற்கைக்கோள் உதவி, தேடல் மற்றும் மீட்பு சேவைகளையும் அளிக்கும். வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எஃப் 14 ராக்கெட் 420 டன் எடை 51.7 மீட்டர் உயரத்துடன் மூன்று நிலைகளைக் கொண்டது. முதல் நிலையில் 139 டன் உந்து சக்தியை கொண்ட திட உந்து சக்தி மோட்டார் மற்றும் 4 உந்து சக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்து சக்தியை கொண்டுள்ளன. இரண்டாவது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம் மூன்றாவது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் நிலையாகும். வளிமண்டலத்தில் இருக்கும் போது செயற்கை கோளை 'ஓகிவ் போலோட் பேரிங்' என்கிற நவீன முறையில் பாதுகாக்கப்படுகிறது இன்று இஸ்ர விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
SOURCE :DAILY THANTHI