Kathir News
Begin typing your search above and press return to search.

ஒடிசாவின் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியது என்ன? தி.மு.க.வின் திரித்து பேசும் நாடகம் நியாயமா?

ஒடிசாவின் தேர்தல் உரையில் பிரதமர் மோடி தமிழர்களை இழிவுபடுத்தியதாக ஸ்டாலின் பொய் பரப்புரை செய்து வருகிறார்.

ஒடிசாவின் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியது என்ன? தி.மு.க.வின் திரித்து பேசும் நாடகம் நியாயமா?
X

KarthigaBy : Karthiga

  |  24 May 2024 11:41 AM GMT

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியதாக ஸ்டாலின் கூறியது:-

ஸ்டாலின் பேச்சு:

"புகழ்பெற்றஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசி இருக்கிறார் இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும். ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழக மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா?தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழக மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவினரின் இன பாகுபாடு:

மோடி கூற வந்த கருத்து வேறு. அது பொய்யாக திரித்து பரப்பப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.தமிழர் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற பேச்சுகளை திமுகவினரே அதிகம் பேசியுள்ளனர். வடஇந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வரக் கூடாது .அவர்களை அடித்து விரட்ட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினரும், தமிழ்தேசியவாதிகளும் பேசி வருகின்றனர். பாஜகவை வடஇந்திய கட்சி எனவும் இந்தி ஆளும் மாநிலங்களின் கட்சி பாஜக எனவும் பாஜகவினர் இந்திக்கார்கள் எனவும் தமிழ்தேசியவாதிகள் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடாது எனவும் பேசி வரும்பொழுது ஒடிசாவை ஒரியாவை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் ஆள வேண்டும் என மோடியும், அமித்ஷாவும் கூறுவதில் என்ன தவறு உள்ளது?MGR ரை மலையாளி என கூறி இன பாகுபாட்டை பேசியவர் தான் கருணாநிதி.

ஸ்டாலினின் தூண்டிவிடும் செயல்:

இந்தி மொழி பேசும் மாநிலங்களை 'கோமூத்ர மாநிலங்கள்' என்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி.செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஸ்டாலின், மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது. தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், ஐ.நா சபை போன்ற உலகளாவிய மன்றங்களிலும் தமிழ், தமிழகம், தமிழர் பெருமைகளை பிரதமர் மோடி பேசி வருகிறார். உலகின் தொன்மையான மொழி தமிழ் என உலக அரங்குகளில் பேசியவர் பிரதமர் மோடி மட்டுமே. தமிழக மக்களுக்கு எதிராகப் பேசி விட்டார் என்று சொல்வதை மக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். ராகுல் காந்தியின் ஆசான் சாம் பிட்ரோடா தமிழகத்தை தமிழர்களை இழிவு படுத்தி பேசிய போது அமைதியாக இருந்த முதல்வர் இப்பொழுது பிரதமர் பேசும்போது அவரின் கருத்துக்களை திரித்து பொய்பரப்புரை செய்ய முயற்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

இனம், மொழி பாகுபாடு அற்ற தலைவர் மோடி:

தலைவர்கள் பேசும் பொழுது சில சமயங்களில் சிலவற்றை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு சில உதாரணங்கள் தேவைப்படுவதால் இது போன்ற பேச்சுக்கள் வருகிறதே தவிர தமிழ் மீதோ தமிழர்கள் மீதோ நிச்சயமாக மோடிக்கு வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ பாகுபாடோ துளியும் கிடையாது. மோடி தும்மினால் துப்பினால் குற்றம் கண்டுபிடிக்க ஒரு கூட்டம் இருக்கும் பொழுது இது போன்ற தகவல் கிடைக்கும் போது அவர்கள் சும்மா விடுவார்களா? ஒன்றை இரண்டாக்கி மேலும் திரித்து பொய் பரப்புரை செய்வது சகஜம் தானே. எது எப்படி இருப்பினும் மோடி எந்தவித பாகுபாடும் இல்லாத தன்னலமற்ற பெரும் தலைவர் என்பதே மறுக்க முடியாத உண்மை.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News