தஞ்சை தேர் விபத்து என்ன நடந்தது? - காரணம் உயர்த்தப்பட்ட சாலையா? அல்லது முறையாக அமைக்கப்படாத மின்கம்பியா?
தஞ்சாவூர் அருகே கோவில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

By : Mohan Raj
தஞ்சாவூர் அருகே கோவில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்காண சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியிலுள்ள போரூர் சாலையில் மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர் அப்பொழுது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது தேர் உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது, இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த விபத்திற்கான காரணம் என்ன என அங்கு உள்ளவர்களை விசாரித்த பொழுது, தேர் திருவிழாவின் போது தேரைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரை விட்டு தள்ளி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கூறப்படுகிறது. ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவரும் பேர் அருகிலேயே இருந்திருப்பார்கள் இன்னும் பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே தேர் விபத்துக்கு காரணம் என அக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்து தொடர்பாக தஞ்சை தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா கூறுகையில், 'வளைவில் திரும்பும் போது தெரிந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது ஜெனரேட்டரை சரி செய்யும் பொழுது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசி உள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபற்றி அங்கிருந்தவர்கள் கூறும் பொழுது, சாலை உயரத்தை இரண்டு அடி அதிகரித்ததே தேர் விபத்திற்கு காரணம் எனவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலையில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
