இந்திய விமானப்படை பட்டையைக் கிளப்பப்போகிறது - எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாகும் அப்பாச்சி ஹெலிகாப்டர் : பாகிஸ்தானை பதற வைக்கும் டெக்னாலஜி!
இந்திய விமானப்படை பட்டையைக் கிளப்பப்போகிறது - எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாகும் அப்பாச்சி ஹெலிகாப்டர் : பாகிஸ்தானை பதற வைக்கும் டெக்னாலஜி!
By : Kathir Webdesk
இந்திய விமானப் படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அப்பாச்சி ரக 22 போர் ஹெலிகாப்டர்கள் ( Apache AH-64E) வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. போயிங் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. இதில், கடந்த ஜூலை மாதம் 4 ஹெலிகாப்டர்கள் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் இணைக்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ள 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
சிங்கநடை போடும் ஆற்றல் கொண்டவை:
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்து அளிக்கும் உலகிலேயே அதிநவீன மேம்படுத்தப்பட்ட பன்முக போர் ஹெலிகாப்டர் இதுதான். அதிவேகத்துக்கான உயர் செயல் திறன் கொண்ட 2 டர்போஷாப்ட் என்ஜின்களைக் கொண்டுள்ளன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 284 கி.மீ. வானில் இருந்து புறப்பட்டுச்சென்று தரையில் தாக்குதல்கள் நடத்தும் ஏவுகணைகள், லேசர் வழிகாட்டும் ஏவுகணைகள், 70 எம்.எம். ஹைட்ரா ராக்கெட்டுகள், வானில் இருந்து புறப்பட்டுச்சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் இத்தனையும் இந்த நவீன ரக ஹெலிகாப்டரில் அடக்கம்.
இன்னும்கூட இருக்கிறது:
இதில் 1,200 தோட்டாக்களுடன் கூடிய ஒரு 30 எம்.எம். செயின் துப்பாக்கியும் உண்டு. தீ கட்டுப்பாட்டு ரேடார், அதிநவீன சென்சார்களும் இந்த ஹெலிகாப்டரில் இருக்கின்றன. விமானி, துணை விமானி என இருவர் இயக்குவார்கள். இந்த ‘அப்பாச்சி ஏஎச்-64 இ’ ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படையின் தாக்குதல் திறன் மேம்படும். எனவேதான், 22 விமானங்களை வாங்குவதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் போயிங் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது. இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், எகிப்து, கிரீஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட 15 நாடுகள் தங்கள் படையில் கொண்டு உள்ளன. அந்த வகையில் இந்தியா, ‘அப்பாச்சி ஏஎச்-64 இ’ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துகிற 16-வது நாடு என்ற சிறப்பைப் பெறுகிறது.
இதுவரை உலகமெங்கும் 2,200 அப்பாச்சி ஏஎச்-64 இ ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.ஆர்டர் செய்யப்பட்டதில் 8 ஹெலிகாப்டர்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்து சேர்ந்தன.
அதே இடத்தில் கொடுக்கப்பட்ட பதிலடி:
பதன்கோட் விமானப்படை தளத்தை தகர்க்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 6 பேர் 2016-ம் ஆண்டு, ஜனவரி 2-ந்தேதி நுழைந்ததும், அங்கு நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதும், நமது பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 7 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து, விமானப்படை தளத்தை காத்ததும் நினைவுகூரத்தக்கது. அதே தளத்தில் நடந்த விழாவில்தான் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா இந்த 8 ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்த்தார்.
இந்திய விமானப்படையில் ஏற்கனவே உள்ள வயதான எம்.ஐ.-35 ரக ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக அப்பாச்சி ஏஎச்-64 இ ஹெலிகாப்டர்கள் அமைவதாக விமானப்படை தளபதி தனோவா குறிப்பிட்டார்.8 ஹெலிகாப்டர்கள் வந்து விட்ட நிலையில் எஞ்சிய 14 ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்தார். இந்த அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சியை விமானப்படை விமானிகள் அமெரிக்கா போய் பெற்று வந்து விட்டார்கள்.
மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்:
உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டரான அப்பாச்சி, தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் விமானப்படையில் பிரதான ஹெலிகாப்டராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு டர்போஷாஃப்ட் ரக என்ஜின்களை கொண்ட இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 289 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
அனைத்து விதமான காலநிலைகளிலும் செயல்படும் திறன் மிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் இலக்குகளை கண்டறிய, பின்தொடர, தாக்குதல் தொடுக்க ஏதுவாக லேசர், இன்ஃபராரெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அப்பாச்சி ஹெலிகாப்டரால் ஒரே நிமிடத்தில் அதிகபட்சமாக 2,800 அடி உயரம் வரை மேல்நோக்கி பறக்க முடியும்.
மிக அதிகளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தது.
துப்பாக்கிகள் மட்டுமின்றி, அதிநவீன ராக்கெட்டுகள், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள், இரவுநேரத்திலும் அதிவிரைவாக தாக்குதல் நடத்தவல்லது.
இந்திய விமானப்படையின் முக்கிய போர் ஹெலிகாப்டராக விளங்கி வரும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக்-35 ரக ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்தாண்டிற்குள் அந்த இடத்தை அப்பாச்சி நிரப்பும்.