தக்காளி விலை குறைவது எப்போது? வியாபாரிகள் தகவல்
தக்காளி விலை எப்போது குறையும் என்பதற்கு வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்
By : Karthiga
காய்கறி வகைகளில் வரும் தக்காளி, வெங்காயம் ஒவ்வொரு ஆண்டும் ராக்கெட் வேகத்தில் விலை ஏற்றத்தையும், மலமலவன சரிந்து விலை வீழ்ச்சியும் சந்தித்துதான் வருகின்றது. அந்த வகையில் தற்போது தக்காளி மற்றும் சாம்பார் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளியை பொறுத்தவரையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 80 முதல் ரூபாய் 110 வரையிலும் சில்லரை விற்பனை கடைகளில் 120 முதல் 150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்பார் வெங்காயத்தை எடுத்துக் கொண்டால் ரூபாய் 80 முதல் ரூபாய் 130 வரை கோயம்பேடு மார்க்கெட்டிலும் வெளிமார்க்கெட்டில் ரூபாய் 90 முதல் ரூபாய் 150 வரையிலும் விற்பனை ஆகிறது .அதிலும் தக்காளி விலை ஒவ்வொரு நாளும் புது புது உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதாலேயே அதன் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 55 முதல் 65 வரையிலான லாரிகளில் தக்காளி வந்து கொண்டு இருந்த நிலை மாறி தற்போது பாதிக்க பாதியாக குறைந்த முப்பது லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வருகின்றது . கர்நாடகா, ஆந்திரம், தமிழ்நாடு, மராட்டியம் ஆகிய பகுதிகளில் விளையும் தக்காளயே தமிழ்நாட்டின் மொத்த தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் விளைச்சல் பாதிப்பால் மராட்டிய மாநிலத்தில் இருந்து வரும் தக்காளி மூலமாக ஓரளவுக்கு சமாளிக்க முடிவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த விலை ஏற்றம் செயற்கையானது என பேசப்பட்டு வருவது தொடர்பாகவும் தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்தும் வியாபாரிகளிடம் கேட்டபோது தக்காளியை பதுக்கி வைக்க முடியாது. அதையெல்லாம் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் தான் செய்ய முடியும். எனவே செயற்கையான விலை ஏற்றம் என்று சொல்வது தவறு. இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடியை செய்யாமல் இருந்து விட்டனர் .அதனால்தான் இந்த நிலைமை. தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் தக்காளி விலை ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றனர்.
SOURCE:DAILY THANTHI