இனி 'ஹலோ' கிடையாது, 'வந்தே மாதரம்' மட்டுமே - மராட்டிய அரசு அதிரடி
அரசு ஊழியர்கள் போனில் பேசும்போது 'ஹலோ' என கூறாமல் வந்தே மாதரம் என கூற வேண்டும் என மராட்டிய அரசு வலியுறுத்தியுள்ளது.
By : Karthiga
மராட்டிய அரசு நேற்று பொதுமக்கள் செல்போனில் 'ஹலோ' என கூறுவதற்கு பதிலாக 'வந்தே மாதரம்' எனக் கூறுவது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது. இது தொடர்பாக வார்தாவில் நடந்த மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் மாநில கலாச்சாரத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் பேசியதாவது:-
வந்தே மாதரம் என்றால் தாய்க்கு தலை வணங்குகிறேன் என பொருள். எனவே போனில் 'ஹலோ' என்ன சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் என கூறுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். இதே போல மக்கள் ஜெய் பீம், ஜெய் ஸ்ரீ ராம் அல்லது உங்களின் பெற்றோர் பெயரை கூடச் சொல்லிக் கொள்ளுங்கள். இதில் எந்த வார்த்தையை கூறினாலும் சரிதான். ஆனால் போனை எடுத்துப் பேசும்போது 'ஹலோ' என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. சுதந்திர போராட்டத்தின் போது இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்கள் ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. ஆனால் இது பலரை சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள ஈர்த்தது மகாத்மா காந்தி கூட வந்தே மாதரம் முழக்கத்திற்கு ஆதரவளித்தார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போனில் 'வந்தே மாதரம்' என கூறுவது தொடர்பான அரசாணையை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது :-
அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போனில் பேசும் போதோ அல்லது நேரில் ஒருவரை ஒருவவர் சந்திக்கும்போதோ 'ஹலோ' என கூறாமல் வந்தே மாதரம் என கூற வேண்டும். எனினும் இது கட்டாயம் அல்ல. ஆனால் துறைத்தலைவர்கள் வந்தே மாதரம் என கூற ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.'ஹலோ' என்ற வார்த்தை மேற்கத்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது அதற்கு அர்த்தம் கூட கிடையாது. அது வெறும் வார்த்தை தான். அது எந்த உணர்ச்சியும் ஏற்படுத்தாது. 'வந்தே மாதரம்' என மற்றவர்களை சந்திக்கும் போது கூறும்போது, அது ஒரு உணர்வை ஏற்படுத்தும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.