Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை காயத்ரி ரகுராமை, திருமாவளவன் மிக கேவலமாக விமர்சித்தது ஏன்? அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!

நடிகை காயத்ரி ரகுராமை, திருமாவளவன் மிக கேவலமாக விமர்சித்தது ஏன்? அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!

நடிகை காயத்ரி ரகுராமை, திருமாவளவன் மிக கேவலமாக விமர்சித்தது ஏன்? அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2019 10:39 AM IST


திமுகவிற்கு மிகப்பெரிய பிரச்சனைகள் வரும்போதெல்லாம், அதனை திசைதிருப்பி விடுவதற்காக பல பித்தலாட்டங்களை, அவ்வப்போது அரங்கேற்றி வருவது வாடிக்கை. இதற்காக, திமுக ஆதரவு பத்திரிகைகள், திமுக ஆதரவு தொலைக்காட்சிகள், 200 ரூபாய் மீம்ஸ் கிரியேட்டர்கள் இரவுபகலாக முழுமூச்சாக பாடுபட்டு வருகின்றனர்.


சமீபத்தில் முரசொலி அலுவலக மூல பத்திர விவகாரத்தில் திமுக சிக்கிக்கொண்டது, அந்த இடம் பஞ்சமி நிலம் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கொளுத்திப் போட்டார். அது பற்றிக் கொண்டது. இன்றுவரை அதனை அணைக்க முடியாமல் திமுக அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.


முரசொலி அலுவலக - பஞ்சமி நிலம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன். அவரோடு சேர்ந்து கொண்டார், தலித் சமுதாய மூத்த தலைவரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான தடா பெரியசாமி. அவர், ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் தொடர்பாக இயக்கம் நடத்தி வருகிறார். அவர், பஞ்சமி நிலம் தொடர்பாக ஏராளமான தகவல்களையும், ஆதாரங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.


முரசொலி - பஞ்சமி நில பிரச்சனையை திசை திருப்புவதற்காக அரசு மருத்துவர்கள் போராட்டத்தை பயன்படுத்த முயற்சி செய்தார் மு.க.ஸ்டாலின். அதற்கு இடையே மணப்பாறையில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடவே, அதை கையில் எடுத்துக் கொண்டார். குழந்தை சுஜித் பிணத்தை வைத்து, மனசாட்சியே இல்லாமல் அரசியலை செய்தார் ஸ்டாலின்.


அப்போதும்கூட முரசொலி மூல பத்திர விவகாரம் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. அதோடு, முரசொலி மூலப்பத்திர விவகாரம், திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்தது.


இந்த நிலையில், திமுகவின் பிரச்சனைக்கு கூட்டணி கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்று திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு மேடையில் முழங்கினார்.


இந்த சூழ்நிலையில்தான், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் திமுகவிற்கு கிடைத்தது. அதை வைத்து முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தை திசை திருப்ப முயன்றனர். அதுவும் ஒரு வார காலத்திற்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை.


அதோடு ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையை திமுக உயர்தி பிடிக்க பிடிக்க, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பச்சமுத்துவின் (பாரிவேந்தர்) எஸ்ஆர்எம் பல்கலையில் சமீபத்தில் 3 மாணவ – மாணவிகளின் மர்ம மரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.


இந்த நிலையில்தான், திருமாவளவன் புதுச்சேரியில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், இந்து தெய்வங்களை கேவலமாக விமர்சித்து பேசினார். இது இந்துக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பரவலாக இந்து அமைப்பினர், திருமாவளவன் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். தனிப்பட்ட முறையிலும் பலர், திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளனர். இருந்தாலும் திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அடுத்து அவர் கலந்து கொண்ட ஒரு திருமண நிகழ்ச்சில், “விஞ்ஞான ரீதியில், பகுத்தறிவோடு ஆராய்ந்து நான் உண்மையை சொன்னேன்” என்கின்ற ரீதியில் தனது இந்து தெய்வ அவமதிப்பை நியாயப்படுத்தினார்.


இது இந்துக்களுக்கு திருமாவளவன் மீதான கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக திருமாவளவனுக்கு தங்களது கண்டனங்களை மிக அழுத்தமாக பதிவு செய்தனர்.


இது ஏதோ திருமாவளவன் தானாக போகிறபோக்கில் இந்து மத தெய்வங்களை அவமதித்து பேசிவிட்டார் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. திருமாவளவன், மிகத்தெளிவாக பேசும், விரல் விட்டு எண்ணக்கூடிய அரசியல் தலைவர்களில் ஒருவர். அவர் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதை முன்னமே திட்டமிட்டு அதன்படி தெளிவாக பேசக்கூடியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று துண்டு சீட்டை கையில் வைத்துக்கொண்டு மேடைகளில் உளறுபவர் அல்ல.


எனவே இந்து தெய்வங்களை அவமதித்து அவர் பேசிய வார்த்தைகள் அவர் முன்னமே திட்டமிட்டு, முரசொலி மூலப்பத்திர விவகாரத்தை திசை திருப்புவதற்காக கையில் எடுத்த ஆயுதம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆகவேதான் அவர் மன்னிப்பு கேட்காமல் இந்து தெய்வ அவமதிப்பு விவகாரத்தை உயிர்ப்புடன் பார்த்துக்கொண்டார்.


இதற்கிடையே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்பது தொடர்பாக கடந்த 19-ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் தேசிய பட்டியலின கமிஷனின் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் திமுக இளைஞரணி செயலாளரும், முரசொலி அறக்கட்டளை நிர்வாக மேலாளருமான உதயநிதி ஸ்டாலின், கலந்து கொள்ள வேண்டுமென்று ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.


ஆனால் அதில் கலந்து கொள்ளாமல் தனக்குப் பதிலாக ஆர்.எஸ்.பாரதியை அனுப்பினார் உதயநிதி ஸ்டாலின். இதற்கிடையே திருமாவளவன் மூலமாக முதலமைச்சரை அணுகி, முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தை நீர்த்துப்போக செய்யவும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதை நம்பும் விதமாக, ஆணையத்திடம் எடப்பாடி அரசு சமர்ப்பித்த ஆவணங்கள், 1974-ஆம் ஆண்டிற்கு பிறகு உள்ளவையாகவே இருந்தது. முரசொலி நில ஆவணம் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆவணமும் 1974-ஆண்டுக்கு பிற்பட்டதுதான்.


இது ஒருபுறமிருக்க, தேசிய பட்டியலின ஆணையத்தில் ஆஜரான தடா பெரியசாமி, 1932-ஆம் ஆண்டு அப்போதைய வெள்ளைக்கார அரசு, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தை பஞ்சமி நிலமாக வழங்கிய கெஜட் ஆதாரத்தை சமர்ப்பித்தார். இதை சற்றும் எதிர்பாராத திமுக நிலை குலைந்து போனது.


முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டால், அதோடு திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் மறுபடியும் இந்த விவகாரத்தை வேறு திசையில் திருப்பிவிட திருமாவளவன் மூலமாக நடிகை காயத்ரி ரகுராமை கீழ்த்தரமாக விமர்சித்து கருத்து வெளியிட வைத்தாராம்.


நடிகை காயத்ரி ரகுராம் குறித்து, திருமாவளவன் தன் திருவாய் மலர்ந்து பேசிய வார்த்தைகளில் சில:-


குடித்து விட்டு கார் ஓட்டுகிற தற்குறிகளுக்கு தெரியாது. பெண்களை வைத்து தொழில் செய்து, கைதாகி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகி, ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த தற்குறிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு என்ன தெரியும்? அவிழ்த்துப் போட்டு, ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது என்பது அவர்களுக்கு தொழில். ஆகவே, அது அவர்களுக்கு கலையாக தெரியலாம். அதை கலை என்ற அடிப்படையில்தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள்.


இவ்வாறு திருமாவளவன் கீழ்த்தரமாக கேவலப்படுத்தி உள்ளார்.


இது ஒட்டுமொத்த திரை உலகில் உள்ள ஒவ்வொரு நடிகைகளையும் அவமானப் படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தும், கீழ்த்தரமான வகையில் திருமாவளவனின் கருத்து அமைந்துள்ளது. ஸ்டாலின், திருமாவளவன் எதிர்பார்புபடி, பலரும் திருமாவளவனை கண்டிப்பார்கள். ஆனால் மூலப்பத்திர விவகாரத்தை மூழ்கடிக்கச் செய்வதுதான் கஸ்டம். காரணம் அது இப்போது பாஜக கையில் உள்ளது. ஆணைத்திடம் ஏற்கவே 1932-ஆம் ஆண்டு கெஜட் ஆதாரம் வழங்கப்பட்டும் விட்டது.


இது ஏதோ இந்து தெய்வங்களை போகிறபோக்கில் திருமாவளவன் விமர்சித்தது போலவும், அதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டித்து பதிவிட்டது போலவும், அதனைத் தொடர்ந்து திருமாவளவனுக்கும் காயத்ரி ரகுராமுக்கும் சண்டை மூண்டது போலவும், இதில் ஆவேசமடைந்த திருமாவளவன் மிகக் கீழ்த்தரமாக காயத்ரி ரகுராமை விமர்சித்தது போலவும் மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த ஏற்பாடுகள் நடந்து உள்ளன. அதற்கு ஏற்றார் போல் திமுக அடிமை ஊடகங்களும், திமுக அடிமை ஊடக நண்பர்களும், செய்தியாளர்களும், தங்கள் விசுவாசமான பணியை செவ்வனே சிறப்பாக செய்திட பேனாவைத் திறந்து தயாராகவே உள்ளனர்.


ஆனால் இவை அனைத்தையும் நேர்மையான கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள். அவர்கள் கையில் ஓட்டு என்ற துருப்புச் சீட்டு உள்ளது. அவர்கள் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அந்த ஆயுதத்தை பயன்படுத்துவார்கள் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News