பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் - அமித்ஷா!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து விடுவோம் என்று காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
By : Karthiga
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து விடும் என்று காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜக இட ஒதுக்கீட்டை ரத்து செய்யாது. காங்கிரஸ் அதுபோன்று முயற்சித்தால் அதை அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த மூன்று ஆண்டுகளில் சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டு விட்டனர். அதன் சிறிய பகுதியினர் மட்டும் சத்தீஸ்கரில் எஞ்சியுள்ளனர் .இன்று அம்பேத்கரின் பிறந்த தினம் அவர் தலித் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுபட்டார். இந்த தினத்தில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் பெருமையை உணர்ந்து செயல்பட நாம் உறுதி ஏற்க வேண்டும். ஆனால் இப்போதும் கூட இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
முக்கியமாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி விடுவோம் .இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து விடுவோம் என்று காங்கிரஸ் ஒரு புரளி பேசி வருகிறது. பாஜக ஒருபோதும் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யாது .காங்கிரஸ் கட்சி அது போன்று முயற்சித்தால் அதனையும் அனுமதிக்காது. பிரதமர் மோடி நாட்டை வலிமையாக்கி வருகிறார். அண்டை நாடுகளின் பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை காத்து வருகிறார் .அதே நேரத்தில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் இந்தியா அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டில் ஊழல் மலிந்து இருந்தது . ஆனால் இப்போது அரசு நிர்வாகம் நேர்மையாக உள்ளது. எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் மத்திய அரசு மீது கிடையாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
SOURCE :Dinamani