மகளிரை அதிகாரமிக்கவர்களாக மாற்றும் முயற்சி: மத்திய அமைச்சர் தகவல்!
மகளிரை அதிகாரமிக்கவர்களாக மாற்றும் வகையில் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கியை அமைப்பது குறித்து பரிசீலனை.
By : Bharathi Latha
பெண்களின் புத்தாக்க முயற்சிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிதி அளித்து, மகளிரை அதிகாரமிக்கவர்களாக மாற்ற ஏதுவாக, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கியை அமைப்பது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருதாகக் அத்துறைக்கான அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் தயாரிக்கப்பட்டப் பொருட்களுக்கான கண்காட்சியான சாராஸ் அஜீவிகா மேளா 2023 நொய்டாவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நாடு முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 9 கோடி உறுப்பினர்கள், மாதம் தலா 100 ரூபாயையை சேமிக்க முன்வந்தாலே அதிகபட்ச டெபாசிட் செய்யப்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வங்கியை அமைக்க உதவும் என்றார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், உணவு வகைகள் உள்ளிட்டவற்றை நாட்டு மக்கள் அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம் என்றார். இந்தக் கண்காட்சியில், 27 மாநிலங்களைச் சேர்ந்த 350 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், 180 அரங்குகளை அமைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 2024ம் ஆண்டிற்குள் 10 கோடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உறுப்பினர்களை உருவாக்குவதே பிரதமர் மோடியின் இலக்கு எனவும் தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ.80,000 கோடியாக இருந்ததாகவும், அந்தத் தொகை தற்போது ரூ.6.25லட்சம் கோடியாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை என்ற அவர், இதன்மூலம், இன்னும் சில ஆண்டுகளில் 10 லட்சம் லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருப்பதாகவும் கூறினார்.
Input & Image Courtesy: News