மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
By : Karthiga
உலகத் தலைவர்கள் வாழ்த்து :
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டி உள்ளது. பா ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் மத்தியில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின்:
அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு அதிபர் புதின் அன்புடன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது இரு நாடுகளின் நலன்களுக்கும் உதவுகிறது என்று புதின் கூறினார்.
இதே போல் உலகத் தலைவர்கள் பலரும் எக்ஸ் தளம் வாயிலாக பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் பின்வருமாறு:- அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வாழ்த்து:
வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எனது வாழ்த்துக்கள் . வரம்பற்ற ஆற்றலின் பகிரப்பட்ட எதிர்காலத்தை நாம் திறக்கும் போது தான் நமது நாடுகளுக்கு இடையே ஆன நட்பு வளர்கிறது இவ்வாறு ஜோபைடன் தெரிவித்துள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி:
தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி சிறப்பாக செயல்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இத்தாலி- இந்தியா நட்பை வலுப்படுத்தவும் நமது தேசங்கள் மற்றும் நமது மக்களின் நல்வாழ்வுக்காகவும் நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து:
பா.ஜனதா தலைமையில் ஆன தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை நிரூபிக்கிறது. இந்த வெற்றிக்காக மோடிக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். நெருங்கிய அண்டை நாடான இலங்கை இந்தியாவுடன் நட்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நேபாள பிரதமர் பிரசந்தா:
தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகத்தின் கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என்று நேபாள பிரதமர் பிரசந்தா தெரிவித்துள்ளார். மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த்குமார் ஜக்நாத்:
மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றத்தை அடையும். மொரீஷியஸ்- இந்தியா சிறப்பு உறவு வாழ்க என்று வாழ்த்தியுள்ளார். பூட்டான் பிரதமர் ஷெரின் டோப்கே:
உலகின் மிகப்பெரிய தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு உள்ளேன். இவ்வாறு பூடான் பிரதமர் ஷெரின் டோப்கே தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். இந்திய மக்கள் அமைதி மற்றும் செழிப்பை பெற வாழ்த்துகிறேன் .இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுவடையும் என நம்புகிறேன். இவ்வாறு உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
SOURCE :DAILY THANTHI