விளம்பரங்கள், லோகோக்களை மறைக்கும் Xiaomi நிறுவனம் - சீன எதிர்ப்பு மனநிலையின் எதிரொலி.!
விளம்பரங்கள், லோகோக்களை மறைக்கும் Xiaomi நிறுவனம் - சீன எதிர்ப்பு மனநிலையின் எதிரொலி.!

சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவும் நிலையில் மக்களிடையே சீனப் பொருட்களை புறக்கணிக்கும் எண்ணம் அதிகரித்துள்ளது. லக்னோ சந்தையில் செல்ஃபோன் விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததாக அண்மையில் செய்தி வெளியான நிலையில் தற்போது இந்தியாவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தனது லோகோ மற்றும் பெயர்ப்பலகைகளுக்கு பதிலாக 'Made in India' லோகோவைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொது மக்கள் சீன எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் அதைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கடைகளையும் ஊழியர்களையும் தாக்கலாம் என்று அஞ்சி மேட் இன் இந்தியா பேனர்களை வைத்தும் ஊழியர்களை சீருடை அணிய வேண்டாம் என்றும் Xiaomi நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்திந்திய செல்ஃபோன் சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு(AIMRA) சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அவர்களது தயாரிப்புகளை விற்பதால் கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், எனவே இத்தகைய நிறுவனங்களின் அடையாளங்களை அழிக்க அல்லது மறைக்க அனுமதிக்குமாறும் கோரி எழுதிய கடிதத்தின் பின்னர் தான் இவ்வாறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீன தயாரிப்புகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தூ வரும், அவற்றை விற்கும் கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ள டெல்லி, மும்பை, சென்னை, புனே, ஆக்ரா மற்றும் பாட்னா போன்ற நகரங்களில் Xiaomi நிறுவனம் ஏற்கனவே சில்லறை விற்பனை கடைகளில் இருக்கும் அதன் விளம்பரங்களை நீக்கி விட்டதாக தெரிகிறது.
AIMRA இந்த கடிதத்தை Xiaomi, Oppo, Vivo, Realme, OnePlus, Lenovo-Motorola மற்றும் Huawei ஆகிய நிறுவனங்களுக்கும் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில் சீன எதிர்ப்பு மனநிலை மாறும் வரை சில மாதங்களுக்கு விளம்பர பேனர்களை அகற்றவும் மறைத்து வைக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. விளம்பர பேனர்கள்/பலகைகள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டால் அது சில்லறை வியாபாரிகளின் தவறு இல்லை என்றும் இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவது தங்கள் கையில் இல்லை என்றும் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் வியாபாரிகள் தரப்பில் சீன தயாரிப்பு பொருட்களுக்கு தேவை குறையவில்லை என்றும் வரத்து தான் குறைவாக உள்ளது என்றும் கூறுவதாக எகானாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விற்பனை வழக்கம்போல் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. சீன தயாரிப்பு செல்ஃபோன்கள் இந்திய சந்தையில் 81% ஐ ஆக்கிரமித்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.