'உங்கள் கனவுகள் தான் எனது தீர்மானம்': இளைஞர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை- பிரதமர் மோடி!
உங்கள் ஓட்டு பலத்தால் குடும்ப கட்சிகளை தோற்கடியுங்கள் என்று இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
By : Karthiga
வாக்காளர் தினத்தை ஒட்டி பா.ஜனதா இளைஞர் அணி ஏற்பாட்டில் முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
சுதந்திரம் பெறுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இளம் தலைமுறைக்கு சுதந்திரத்திற்காக பாடுபடும் பொறுப்பு இருந்தது. அதுபோல் உங்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களின் ஓட்டுகள் நாட்டின் எதிர்காலப் பாதையையும் அணுகமுறையையும் தீர்மானிக்கும். இன்றைய இளைஞர்கள் ஊழலுக்கும் குடும்ப அரசியலுக்கும் எதிரானவர்கள். குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் மற்ற இளைஞர்கள் முன்னேற அனுமதிப்பதில்லை. அத்தகைய கட்சிகளின் தலைவர்கள் மனநிலை, இளைஞர்களுக்கு எதிராகவே இருக்கும்.
எனவே உங்கள் ஓட்டு பலத்தால் குடும்ப கட்சிகளை தோற்கடிக்க வேண்டும். 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலை இளைஞர்கள் எதிர்காலத்தை இருளாக்கிவிட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது .இருளில் இருந்து எனது அரசு நாட்டை மீட்டுள்ளது.இப்போது வாய்ப்புகள் பற்றி பேசப்படுகிறது. முன்பெல்லாம் ஊழல்கள் தான் தலைப்பு செய்தியாக இருந்தன. தற்போது நம்பகத்தன்மை ,வெற்றி கதைகள் ஆகியவே பேசப்படுகின்றன. பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் தான் செய்தியாகியுள்ளன. உங்கள் கனவுகள் தான் எனது தீர்மானம்.
இளைஞர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிப்பேன் . கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பான்மை கொண்ட வலிமையான நிலையான அரசு இருந்ததால் தான் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது. உதாரணமாக 370-வது பிரிவு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம், பெண்கள் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை உள்ளிட்ட சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI