சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்!
சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என மதிய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
By : Karthiga
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.எஸ் ஜெயின் கல்வி அறக்கட்டளையின் இணை செயலாளர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு தேவையான நவீன பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்காக தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் ரூபாய் 20000 கோடிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முடிவில் இது 24 ஆயிரம் கோடியாக உயரும்.
இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களில் 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். எனவே இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இது உதவியாக இருக்கும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் . அதற்கு முன்னதாகவே இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் எல்லோருக்கும் அரசால் வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது. வேலை வாய்ப்பு எதிர்பார்க்காமல் வேலை வாய்ப்பு உருவாக்கும் தொழில் முனைவோர்களாக இளைஞர்கள் மாற வேண்டும்.
ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வங்கியில் ரோஜ்கர் மேளா என்ற வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது .இதன் மூலம் இந்த நிதியாண்டில் இதுவரை 8 லட்ச பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் இந்திய பணத்தை பரிமாற்றம் செய்ய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்பது தவறான கருத்து . இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ் ஜெயின் கல்வி அறக்கட்டளை தலைவர் பதம் சந்த் சோடியா கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
SOURCE :DAILY THANTHI