பரத நாட்டியத்திலும், கர்நாடக இசையிலும் கலக்கும் இந்திய வம்சாவளி சிறுமி!
By : Bharathi Latha
ஷார்ஜாவில் வசிக்கும் 13 வயது பெண்ணான பிரகர்தி சுரேஷ், கர்நாடக இசை பாடகரும், பரதநாட்டிய கலைஞரும் ஆவார். தமிழகத்தின் திருச்சியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ் கீர்த்தனைகளை பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடக இசை பயின்று வருகிறார்.
மதுரை மணி ஐயரின் உறவினரும், பத்மபூஷன் டி.வி.ஷங்கரநாராயணனின் மகளுமான டாக்டர். அம்ருதா சங்கரநாராயணனிடம் தற்போது இசை பயின்று வருகிறார். அத்துடன் கடந்த 9 ஆண்டுகளாக பரதநாட்டியமும் பயின்று வருகிறார். பிரபல நடிகையும் நடன கலைஞருமான வைஜெயந்தி மாலாவின் நடன பள்ளியில் இருந்து வந்தவரான கிரிஷ் குமாரிடம் பரதநாட்டியம் பயின்று வருகிறார்.
பிரகர்தி சுரேஷ் தான் ஷார்ஜாவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கலைகளை முன்னெடுத்து சென்றதற்காக ஜிரோனிமோ ஸ்டில்டன் பவுண்டேஷன் விருதினை பெற்றவர். சர்வதேச ஷார்ஜா புத்தக விழாவில் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. பிரகர்தி தான் பங்கேற்ற சர்வதேச மேடைகள் பலவற்றிலும் தமிழ் கீர்த்தனைகளை தான் பாடி உள்ளார். உலகம் முழுவதும் பாரம்பரிய இசையை கொண்டு செல்வதற்காக யூடியூப் சேனல் ஒன்றையும் துவங்கி உள்ளார்.
மாயவரம் மற்றும் திருவிடைமருதூரில் நடைபெற்ற மயூரா நாட்டியாஞ்சலி மற்றும் மதுரா நாட்டியாஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 2019 ல் ஐக்கிய அரபு நாடுகளில் தேசிய அளவில் நடத்தப்பட்ட மார்கழி விழாவில் இவர் பட்டம் வென்றார். சர்வதேச இசை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் இவர் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை இவர் வென்றுள்ளார்.