கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீராமர் ஆலயத்தின் ராம நவமி மஹோற்சவம்!
By : Bharathi Latha
சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் வெகு விமரிசையாகத் துவங்கியது. முருகன் என்றால் குளக்கரைச் சாலை அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயம் என சிங்கப்பூரில் சகலவித தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலித்து வருவது சிங்கப்பூர்த் தமிழர்களை ஆன்மிக வெள்ளத்தில் ஆழ்த்தி வரும் செய்தியாகும்.
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சாங்கி கிராமத்திலுள்ளவர்கள் ஒரு அரச மரத்தடியில் ஸ்ரீ ராமர் படத்தை வைத்து பண்டாரத்தைக் கொண்டு வழிபாடு நடத்திய இடம் இன்று சகலவித தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலித்து வரும் புனித சேத்திரமாக விமானங்களும் தலைகுணிந்து செல்லும் தலமாக - ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் 21 அடி உயரமுள்ள ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமியும் அருள்பாலித்திட விளங்கி வருகிறது.
ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது. மேத் திங்கள் 2 ஆம் தேதி வரை நடைபெறும். இன்றைய சூழல் கருதி சுவாமி புறப்பாடு மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி சந்தணக் காப்பு அலங்காரம் நடைபெறும். மே முதல் தேதி திருக்கல்யாண மஹோற்சவத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராம நவமி நன்னாளில் வைகறையிலிருந்தே பக்தர்கள் திரளாக வருகை புரிந்ததால் ஆலய நிர்வாகம் சமூக இடைவெளி விட்டு, முகக் கவசமணிந்த பக்தர்களை அணி அணியாக நுழை வாயில் ஒருபுறமும் வெளியேறும் வழி மறுபுறமுமாக ஒழுங்குபடுத்தி பக்தர்கள் வசதியாக தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆயிரக் கணக்கானோர் இரவு வரை வருகை புரிந்து தரிசனம் செய்து ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி அருள்பெற்றுச் சென்றனர். பக்தப் பெருமக்கள் நவமி மஹோற்சவம் முழுவதும் பங்கேற்று அருள் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகமும் அர்ச்சகர் குழுவும் விரும்பி அழைக்கிறது.