பஹ்ரைனில் தமிழக பெண்களுக்கு நடந்த கொடூரங்கள்.. 3 தமிழக பெண்கள் மீட்பு!
By : Bharathi Latha
வெளிநாடுகளில் வீட்டு வேலைக்காக பல்வேறு தமிழகப் பெண்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக, பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பஹ்ரைனில் வீட்டு வேலைக்காகச் சென்ற இடத்தில், பல இன்னல்களுக்கு ஆளான தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மீட்கப்பட்டனர்.
வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி ஆகிய 3 பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முகவர்கள் மூலமாக பஹ்ரைனுக்கு வீட்டு வேலைக்காகச் சென்றனர். வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில் தொடர்ந்து, இவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக சாப்பாடு இல்லாமல் தனியாக ஒரு அறையில் அடைக்கபட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெளியிட்ட வாட்ஸ் அப் காணொலி மூலமாக இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த சமூகவியலாளரும் AIMS பொதுச் செயலாளருமான கன்யா பாபுவின் முயற்சியால் பஹ்ரைனில் இயங்கி வரும் இந்தியத் தூதரகத்துக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பஹ்ரைனில் சமூக சேவையாற்றிவரும் அன்னை தமிழ் மன்றம் ICRM எனும் அமைப்பின் காரணமாக இந்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு தகுந்த பாதுகாப்போடு தங்க வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்ஸவா, இதர தமிழ் அமைப்புகளின் உதவியால் 3 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உரிய பயணச் செலவுகள் முழுவதையும் இந்தியத் தூதரகம் பொறுப்பேற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.