87 வயதில் கனடாவில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கை தமிழ் பெண் !
இலங்கையை சேர்ந்த வரதலெட்சுமி சண்முகநாதன் என்பவர் தன்னுடைய 87 வயதில் கனடாவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
By : Bharathi Latha
இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி சண்முகநாதன் கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம்பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார். தன்னுடைய 87ஆம் வயதில் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இவர் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலனை கிராமத்தில் பிறந்த வரதலெட்சுமி அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான நாட்டு குழந்தைகளுக்கும் கல்வியறிவைப் புகட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி மீதான தீரா காதலோடிருக்கும் வரதலெட்சுமியின் கற்றல் வாழ்கை அத்தனை சீராக இல்லை. இன்டர்மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிபெற்றபோதிலும், இன, பாலின சிறுபான்மை மாணவர்களுக்கு அளவான இடங்களே இருந்ததால் அவரால் இலங்கையில் தன்னுடைய கல்வியைத் தொடர முடியவில்லை.
தன்னுடைய கல்வியைத் தொடர அவர் கடல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "கல்லூரி படிப்புக்கு என்னை வெளிநாட்டுக்கு அனுப்புமாறு என் ஆசிரியர்களில் ஒருவர் என் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். எனவே அவர்கள் என்னை இந்தியாவுக்கு அனுப்பினர்" என்கிறார் வரதலெட்சுமி ஷண்முகநாதன். தமிழ்நாட்டிலுள்ள சென்னை பல்கலைக்கழகத்தில்தான் அவர் தன் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இலங்கைக்குத் திரும்பியவர் உள்ளூர் பள்ளியில் குழந்தைகளுக்கு இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். அப்படியே சிலோன் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் எஜுகேஷன் பெற்றார்.
அடுத்து என்ன கற்பது என்பதில் பெரும் ஆர்வத்தோடு இருந்தவரின் கல்வி நிலை, அவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது தடைபட்டது. அவர் தன் குடும்ப விவகாரங்களை கவனிக்க வேண்டி இருந்தது. பிறகு ஓர் ஆசிரியரை திருமணம் செய்து கொண்டு இலங்கையை விட்டு வெளியேறினார்.அப்படியே எத்தியோபியா, சியாரா லியோன், நைஜீரியா, பிரிட்டன் என பல நாடுகளில் வாழ்ந்தபின் 2004ம் ஆண்டு கனடா வந்தடைந்தார். தன் 85ஆவது வயதில், யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் சமர்பிக்கும் போது எழுதியுள்ளார் வரதலெட்சுமி. அவரை யார்க் பல்கலைக்கழக நிர்வாகம், 2019ம் ஆண்டு அவரை மாணவராக சேர்த்துக் கொண்டது. அதன் பின்னர் தற்பொழுது தன்னுடைய முதுகலைப் பட்டத்தையும் அவர் முடித்துள்ளார்.
Input & Image courtesy:BBC news