Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : 'ஒன்றியம்' - இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?

சிறப்பு கட்டுரை : ஒன்றியம் - இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?
X

VigneshBy : Vignesh

  |  5 Jun 2021 10:20 AM IST

"ஒன்றியம்" என்ற சொல் ஒன்றும் பயன்படுத்தபட கூடாத சொல் அல்ல. ஆனால் அதை பயன்படுத்துவோரும் அவர்களின் மறைமுக நோக்கங்களும் இங்கு விவாதிக்கப்பட வேண்டியது. ஒன்றியம் என்ற சொல் ஒற்றுமையை அல்லது ஒருங்கே இணைவதை குறிக்கும் பதத்தில் வர கூடிய ஒரு சொல்லே. ஆனால் அதன் பொருளுக்கு எதிராக, குறிப்பாக இந்திய ஒருமைபாட்டிற்கு எதிராக அச்சொல் இன்று பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பு வரையிலும், மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு அறிக்கைகள் "மத்திய அரசு" என்றே குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன், குறிப்பாக ஸ்டாலின் பதவியேற்றவுடன் பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பின்னர் அதை தி.மு.க ஆதரவு ஊடகங்கள் பெரிதாய் பேசி வீடியோக்களை வெளியிட்டனர்.

இம்மாதம் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 43 வது GST கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் "மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

தற்போது ஸ்டாலின் அவர்களின் மகனும், கட்சியில் ஸ்டாலினுக்கு பிறகான அதிகார மையமாக திகழும் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தன்னுடைய டிவிட்டர் பதிவுகளில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார். இது எதோ இவர்கள் முதலாய் பயன்படுத்திய சொல் அல்ல. சில காலமாகவே வைகோ அவர்களும் இதை வலியுறுத்தி வந்தார்.

ஒருவேளை தி.மு.க மற்றும் ஒத்த சிந்தனையாளர்கள் யாவருக்கும் இந்திய தேசிய வரையறைக்குள் இருக்க விருப்பம் இல்லை என்றால் அதை வெளிப்படையாக சொல்லியே பேசலாம். இப்படி ஒற்றைச் சொல்லைக் கொண்டு சோசியல் மீடியாவில் திராவிட வீரர்கள் முஷ்டியை தூக்கி மீசையை முறுக்க தேவையில்லை.

ஆதலால் ஒன்றியம் என்ற சொல்லை விட, அதை ஏன் இப்போது தி.மு.க கையில் எடுத்துள்ளது என்பது தான் இங்கு ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியது. அந்த ஒற்றைச் சொல் மூலம் தி.மு.க சொல்ல வருவது என்ன? இந்திய தேசியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தியலை, ஒரு சவாலை முன் வைக்கிறதா? பிரிவினையை பேச முற்படுகிறதா? மாநில உரிமைகள் என்ற பேரில் மீண்டும் ஒரு கலக பிரச்சாரத்தை துவங்குகிறதா? என்ற கேள்விகள் முன் வருகின்றன.

ஒற்றைச் சொல்லை மையப்படுத்தி எதற்கு இத்துணை கேள்விகள் என்றால், அதன் வரலாறு அப்படி. பாரத தேசம் சுதந்திரம் அடைந்த பின்பு பிரிவினை பேசிய தி.மு.க ஒரு கட்டத்தில் அதை கைவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

தி.மு.க துவங்கப்பட்ட காலம் முதலே 'திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்தே செயல்பட்டது. இந்திய தேசியத்திற்கு எதிராக, முரண்பட்டே தி.மு.க இருந்தது. அன்று "திராவிடர் நாடு திராவிடருக்கே" என்ற கருத்தை தொடர்ந்து தி.மு.க பரப்பி வந்தது. மேலும் ஒரு குறிப்பிட்ட நாளை "திராவிட விடுதலை நாள்" எனவும் கொண்டாடி வந்தது. மறைந்த முன்னாள் அமைச்சர் திரு. முரசொலி மாறன் எழுதிய "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்" என்று புத்தகமே 1956-வாக்கில் வெளியிடப்பட்டது.

ஆனால் அன்றே இதற்கு தென்னகத்தில் இருந்த மற்ற மொழி பேசும் மக்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கப் பெறவில்லை. ஏன், தமிழகத்திலும் இந்த கோரிக்கை பெரியளவில் எடுபடவில்லை. இதை அண்ணா மற்றும் வினோபாபாவே அவர்களின் உரையாடல் மூலம் அறியலாம். பூமிதான இயக்கம் தொடர்பாக நாடு முழுவதும் பயணித்து கொண்டிருந்த பாபா தமிழகம் வந்த போது அண்ணாவை சந்திக்கிறார். அப்போது நடந்த உரையாடலை அண்ணாவே வெளியிட்டு இருக்கிறார்.

அதில் குறிப்பாக இந்திய தேசத்திற்குள் இருக்க முடியாது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளடக்கிய தனி நாடாக திராவிட நாடு இருக்கும் என்றும், ராணுவம் போன்று தனிப் படைகள் இருக்கும் என்றும் அண்ணா கூறி இருக்கிறார். அப்போது குறுக்கிட்ட பாபா இவ்வாறு சொல்கிறார் "நான் ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன், தமிழர்களுடன் தமிழர்களுடன் ஒன்றுகூடி அரசு அமைக்க விரும்பும் எண்ணம் ஆந்திரர்களிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே?" என்று கூறியிருக்கிறார்.

இப்படி தி.மு.க வின் ஆரம்ப நாட்களில் இந்திய தேசியத்தை உடைத்து வெளியேறி தனிநாடு அமைப்பதிலேயே குறியாக இருந்தது தெரியவருகிறது. ஆனால் 1963-இல் தேசிய ஒருமைபாட்டுக் குழுவின் முடிவுகளின் படி 'பிரிவினைவாத தடுப்பு சட்ட மசோதா' கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே அண்ணா அவர்கள் தி.மு.க வின் விதிகளை மாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இயன்ற வரை அதிகாரங்களை பெற்று பாடுபடுவோம் என கொள்கைகளை மாற்றினார்.

இப்படி பாரதம் அல்லது இந்தியா என்ற தேசத்தை ஏற்காமல் பிரிவினையை பேசியே தான் தி.மு.க அதன் ஆரம்ப காலங்களில் செயல்பட்டது. தி.மு.க-வின் முதல் தேர்தல் அறிக்கையில் பிரிவினையை வலியுறுத்தி, மாநிலங்கள் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்து பார்த்தால் ஒருவேளை தி.மு.க பின்னோக்கி பயணப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மாநில உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பேசுவது என்பது வேறு. ஆனால் அந்த கோரிக்கைகளின் பின் ஒளிந்து கொண்டு பிரிவினைவாதம் பேசுவது என்பது வேறு. பிரிவினைவாதம், மாநில உரிமைகள் இரண்டிற்குமான வேறுபாடுகளின் இழைகோடுகள் மிக மெல்லியதாக இருப்பதால், அதில் எளிதாக அரசியல் ஆட்டம் ஆடலாம் என்று மாநில கட்சிகள் ஆரம்பித்தால் இந்திய ஒருமைப்பாடு சீர்குலையும், உறுதியாக ஒருநாள் உள்நாட்டு போர் வெடிக்கும்.

இதை எல்லாம் கவனித்து வரும் வலதுசாரி அரசியல் நோக்கர்கள், இந்திய அரசை தன்னுடைய சுயநலன்களுக்காக மிரட்ட தி.மு.க தனது பிரித்தாளும் ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்து விட்டதாகவே தெரிகிறது என்று ஐயம் கொள்கிறார்கள்.

இந்த தேசம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒற்றை தேசமாகவே இருக்க வேண்டும், இங்கு பிரிந்து நின்று பெரிதாய் சாதிக்க ஒன்றுமில்லை, ஒற்றுமையே பலம். ஒன்றியம் என்று சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் ஒன்றி வாழும் பாரத தாய் மக்களின் மனதில் பிரிவினையை கலக்க யார் முயன்றாலும், இந்த இந்திய தேசத்தின் பிள்ளைகளாக நாம் ஒன்றுபட்டு நின்று அதனை எதிர்கொள்ள வேண்டும்.

இறுதியாக ""ஒன்றியம்" இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?"ஒன்றியம்" இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?" என்ற உணர்வையும், நாம் எல்லாம் "இந்தியர்கள்" என்ற உணர்வையும் மக்களிடம் சிதைக்கும் வழியாக இந்த "ஒன்றிய" சொல் பிரயோகம் இருக்க கூடாது என்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பம்.

குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரையே சாரும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News