6.3 கோடி இந்துக்களின் வழிபாட்டு உரிமையை காப்பதும் சமூக நீதி தான் - கனிமொழிக்கு சாமனியனின் சாட்டையடி கேள்விகள்!
By : G Pradeep
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க கோரி கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை துவங்கி உள்ளார்.
இது குறித்து மதிப்பிற்குரிய தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்களிடம் டைம்ஸ் நவ் செய்தி ஊடகத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் வெளிப்படுத்திய கருத்தில் இருக்கும் நோக்கத்தை நான் 100 % ஆதரிகிறேன் முற்றிலும் ஏற்கிறேன்.
"நாட்டில் சாதி கலவரங்கள் நடக்க கூடாது. சமூக நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்; சமூக நீதி காக்கப்பட வேண்டும்" என்பதில் எனக்கு எள் அளவும் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதற்கு அவர் முன் வைக்கும் கருத்தை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை.
"கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டால் மீண்டும் சாதி கலவரங்கள் அதிகரிக்கும்; சமூக நீதி பாதிக்கப்படும்" என்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இந்த அச்சம் சரியானது தான் என்று தோன்றும். ஆனால், இந்தப் பிரச்சினையை நம்மால் சட்ட ரீதியாக எளிதில் சரி செய்ய முடியும்.
"சாதி சங்க தலைவர்கள், சாதிய கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோவில் நிர்வாக குழுவில் இடம்பெற முடியாது" என்று ஒரு சட்ட விதியை உருவாக்கலாம். அந்த ஊரில் இருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் நிர்வாக குழுவில் உரிய பிரிதிநிதித்துவம் வழங்கலாம். 'சாதி சங்க தலைவர்களும், அரசியல்வாதிகளும் தான் தங்கள் சுய லாபத்திற்காக சாதி கலவரங்களை தூண்டி விடுகின்றனர்' என்ற உண்மை ஓரளவு விவரம் அறிந்த அனைவருக்குமே தெரியும்.
இதையும் மீறி சாதிய மோதல் ஏற்பட்டால், அதற்கு தண்டனை வழங்குவதற்கு தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. 2-வதாக, "ஆந்திராவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருப்பதி கோவில் மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறதே?" என்று கனிமொழி அவர்கள் கேட்கிறார்.
தமிழ்நாட்டில் 12 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடக்காமல் அழிந்து கொண்டுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கொண்ட 34,000 கோவில்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருமானம் வருகிறது. இது தான் அரசின் சிறப்பான நிர்வாகமா?
தமிழ்நாட்டில் இருக்கும் இருக்கும் ஆயிரக்கணக்கான கோவில்களின் அவல நிலையை பற்றி கேள்வி கேட்டால், ஆந்திராவில் இருக்கும் ஒரே ஒரு கோவிலை ஒப்பீடாக காட்டுவது எப்படி சரியாக இருக்கும்?
மதசார்பற்ற ஒரு நாட்டில் கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம் போன்ற சமூகத்தினர் அவரவர் வழிபாட்டு தலங்களை நிர்வகிக்க உரிமையும் அதிகாரமும் கொண்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 87 சதவீதமாக இருக்கு இந்து சமூகத்திற்கு மட்டும் அந்த உரிமை ஏன் மறுக்கப்படுகிறது.
இது இந்து சமூகத்திற்கு அரசாங்கம் இழைக்கும் அநீதி அல்லவா?