கன்னட திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட பிராமண வெறுப்பு காட்சிகள் : எப்படி சாத்தியமானது?
By : Pranesh Rangan
சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான பொகரு என்ற திரைப்படம், பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியதாக சர்ச்சையில் சிக்கியது. நந்தா கிஷோர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, பி.கே.கங்காதர் தயாரித்துள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரரான துருவா சர்ஜா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் விதிமுறைகளுக்கு பின்னர் வெளிவந்த முதல் பெரிய பட்ஜெட் கன்னட படம் இது தான். இந்த திரைப்படம் ஒரு ரவுடியின் வாழ்க்கையை சுற்றி வளம் வருகிறது. பிராமண சமூகத்தினரை மோசமாக சித்தரித்ததால் கர்நாடக பிராமண அமைப்புகள் இந்த திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இந்த திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு ஆளானது.
இந்த திரைப்படத்தில் வெளிவந்த மோசமான காட்சிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பப்பட்டது. திரைப்படத்தை இயக்கியவர்கள் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
முன்னனி நடிகையாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தண்ணா, இந்த திரைப்படத்தில் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில், ஹீரோ முரட்டுத்தனமாக கதாநாயகியின் வீட்டிற்குள் நுழைந்து, அவளது உறவினர்களை இழிவான வார்த்தைகளால் பேசுகிறார். அவர்களுடன் சண்டையிடுகிறார். ஒரு காட்சியில், படத்தின் கதாநாயகன் பூணுல் அணிந்த பிராமணர் ஒருவரின் தோளில் கால் வைத்திருப்பதைக் காணலாம். மற்றொரு காட்சியில், ஒரு பிராமணர் க்ரேனில் வைத்து தலைகீழாக தொங்கவிடபடுகிறார். பிறகு அவரைத் தாக்குகிறார் கதாநாயகர். மற்றொரு காட்சியில், பூஜைக்கு தண்ணீரை எடுத்துச் செல்லும் ஒரு பிராமணரை கதாநாயகன் ஆக்ரோஷமாக தாக்குகிறார். முகத்தை கழுவ ஹீரோ அந்த தண்ணீரைப் பயன்படுத்துகிறார். மேலும், மற்ற காட்சிகளில், பிராமணர்கள் உட்கொள்ளும் சைவ உணவைப் பற்றி அவர் சர்ச்சை கருத்துக்களைக் கூறுகிறார். இதோடு நின்றுவிடவில்லை. இந்து தெய்வங்களையும் இந்த திரைப்படத்தில் இழிவுப்படுத்தியுள்ளனர். கோயில்களில் தெய்வங்களை தரிசனம் செய்யும் இந்துக்களின் பாரம்பரியத்தை கதாநாயகன் கேலி செய்கிறார்.
கன்னட பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகருமான சிறுபட் இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை யூடியூப்பில் வெளியிட்டார். பிராமண சமூகம் கொச்சைப்படுத்தப்படும் காட்சிகளை கடுமையாக எதிர்த்தார். இந்த வீடியோ வைரலாகி, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதிரான கோபத்தை வரவழைத்தது. பிராமணர்கள் மட்டுமல்ல, பல சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பிராமணர்களை அவமதிக்கும் காட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இந்த வீடியோவைத் தொடர்ந்து, பொகரு திரைப்படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு பலம் பெற்றது. இந்த எதிர்ப்புகள் துருவா சர்ஜாவின் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. துருவா சர்ஜாவின் ரசிகர்கள் சிறுபட்டிற்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தனர். துருவா சர்ஜாவின் ரசிகர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவையும் சிறுபட் வெளியிட்டார்.
கர்நாடகாவில் இந்த சர்ச்சை சூடுபிடிக்கவே, மைசூரில் மாவட்ட பிராமணர்கள் சங்கத்தின் (DBA) உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி, சர்ச்சைக்குரிய காட்சிகளை திரைப்படத்திலிருந்து அகற்றுமாறு கோரினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மைசூரு துணை ஆணையர் அலுவலகம் அருகே கூடி திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாகவும், திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு கோரியதாகவும் கூறப்படுகிறது. DBA தலைவர் டி டி பிரகாஷ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "பிராமணர்களை அவமரியாதை செய்துள்ளனர். எங்களுக்கு ஒற்றுமை இல்லை என்றும், நாங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். 'வாழு, வாழ விடு' என்ற கொள்கையை நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு நடந்துகொள்வது எங்களுக்கு ஏற்கத்தக்கதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் அகற்றப்படும் வரை முழு திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும்", என்று கூறினார்.
இதேபோன்ற போராட்டங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தன. பெஜாவரா மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அதிகாரிகளிடம் பேசியதாகவும், தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஸ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள் கூறியதாக செய்தி குறிப்புகள் கூறுகின்றன. அமைதியான சமுதாயத்தை அடைய யாரும் எந்த சமூகத்தையும் கேலி செய்யக்கூடாது என்று பெஜாவர மடத்து ஸ்வாமிகள் வலியுறுத்தினார்.
"எந்த சமூகத்தையும் அவமதிப்பது ஏற்கத்தக்கதல்ல. பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை உடனடியாக அகற்ற வேண்டும்," என்று பெஜாவர மடத்து ஸ்வாமிகள் கூறினார்.
இதைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனர் நந்தா கிஷோர் பிராமண சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார். காட்சிகள் உள்நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை என்று கூறினார். "நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. பார்வையாளர்களுக்கு வித்தியாசம் தெரியாத அளவிற்கு திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தும் அகற்றப்படும்" என்று அவர் கூறினார்.
கர்நாடக பிராமண மேம்பாட்டு வாரியத்திற்கும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படத்தின் சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டனர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபனைகளை எழுப்பியதையடுத்து கன்னட திரைப்படத்தின் 14 காட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டதாக செய்தி குறிப்புகள் கூறுகின்றன. இந்த திரைப்படத்தின் முன்னணி நடிகர் துருவா சர்ஜா சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். தயாரிப்பாளர்கள் எந்தவொரு சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
ஹிந்து மதத்தையும் பிராமண சமூகத்தையும் இழிவுப்படுத்தும் காட்சிகள் பலவும் எப்போதும் தமிழ் திரைப்படங்களில் இடம்பெறுகின்றன. எனினும் இது போன்ற ஒன்றுபட்ட குரல் தமிழகத்தில் இது வரை எழுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.