இந்தியாவில் புரதக் குறைபாடு - சவால்களும் விடைகளும்!
புரத சத்து நிரம்பியுள்ள பருப்பு வகைகள் உற்பத்தியில் நம் நாடு முன்னணியில் உள்ளது.
By : Saffron Mom
ஒரு ஆய்வின் படி, நமது நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் புரதக் குறைபாடு உடையவர்கள் எனக் கணக்கிடப்படுகிறது. புரதம் நிறைந்த உணவுகளின் பற்றாக்குறையை நம் நாடு எதிர்கொள்கிறதா என்பது தான் நமக்கு எழும் முதல் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் புரத சத்து நிரம்பியுள்ள பருப்பு வகைகள் உற்பத்தியில் நம் நாடு முன்னணியில் உள்ளது, நமது உணவின் முக்கிய அங்கமாகவும் பருப்புகள் உள்ளது. ஆண்டுக்கு 20 மில்லியன் டன் என்ற அளவில், இந்தியா உலகின் பருப்பு வகைகளில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.
புரத சத்து உள்ள உணவுப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லையென்றால் இந்தியாவின் புரதக் குறைபாட்டிற்கான ஒரே லாஜிக்கான விளக்கம், இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது மற்றும் போதுமான அளவு புரதத்தை தொடர்ந்து உட்கொள்வதில்லை என்பதாகும். புரதக் குறைபாடு என்பது மிகவும் உண்மையான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும், இதற்கு உடனடி மற்றும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.
ஒரு சராசரி இந்தியருக்கு, புரதத்தின் பரிந்துரைக்கப்பட்ட உணவு அளவு, ஒரு கிலோ உடல் எடையில் 0.8 முதல் 1 கிராம் வரையாகும். ஆனால் தற்போது சராசரி உட்கொள்ளல் ஒரு கிலோ உடல் எடையில் சுமார் 0.6 கிராம் மட்டுமேயுள்ளது. மேலும் நகர்ப்புறத்தில் (4 சதவீதம்) மற்றும் கிராமப்புறத்தில் (11 சதவீதம்) என தனிநபர் புரத நுகர்வு குறைந்து வருவதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2011-2012 தெரிவித்துள்ளது.
இது உலகின் பிற பகுதிகளுடன் முற்றிலும் மாறுபட்டது. உலகெங்கிலும் புரத நுகர்வு அதிகரித்து வருகிறது, சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 68 கிராம் என்ற சராசரியிருப்பதால், சராசரி புரத நுகர்வு அடிப்படையில் இந்தியா பின்தங்கியுள்ளது.
தேசிய உணவு ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய 'வாட் இந்தியா ஈட்ஸ்' அறிக்கையின் படி, இந்திய உணவுகள் முக்கியமாக தானியங்களை அடிப்படையாகக் கொண்டவை. தானியங்கள் மற்றும் தினைகள் முறையே நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 51 சதவிகிதம் மற்றும் 65.2 சதவிகித ஆற்றலை (energy) பங்களிக்கின்றன, அதே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட பங்களிப்பு 45 சதவிகிதம் மட்டுமே; பருப்பு வகைகள், இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு மொத்த ஆற்றலில் வெறும் 11 சதவீதத்தை மட்டுமே பங்களிக்கின்றன.
தானியங்கள், மோசமான தரம் மற்றும் செரிமானத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவை குறைவான புரதங்களைக் கொண்டுள்ளன. அவை தினசரி அடிப்படையில் தேவையான அளவு புரதங்களுக்கு பங்களிக்காது. இதனுடன், இந்த சோதனை காலங்களில் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க போதுமான மற்றும் அதிக புரதத்தை உட்கொள்ள வேண்டிய வழிகளை அவசரமாக ஆராய்வது அவசியமாகும்.
புரோட்டீன் முரண்பாடு ஆய்வின்படி, இந்தியாவின் புரத விழிப்புணர்வை மூன்று முக்கிய காரணங்கள் பாதிக்கின்றன. அவை, பற்றாக்குறை, மனநிலை மற்றும் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் ஆகும். புரதம் பற்றிய தவறான புரிதல்கள் மற்றும் கட்டுக்கதைகள், எங்கிருந்து புரதம் கிடைக்கிறது என்பது தெரியாமல் இந்திய வீடுகளில் குறைவாக உட்கொள்ளுதல் ஆகியவையும் காரணமாகும். மேலும் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பிரிவுகளுக்கு வசதியின்மையும் காரணமாகலாம்.
பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், கொட்டைகள் மற்றும் விதைகள் முதல் பால், முட்டை, கோழி, இறைச்சி மற்றும் மீன் போன்ற பல புரதச்சத்து நிறைந்த உணவு ஆதாரங்கள் உள்ளன - இவை அனைத்தும் நாடு முழுவதும் எல்லாருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி. இது கலாச்சாரம், நெறிமுறை, சுகாதார தேர்வுகள், விழிப்புணர்வு, வாங்கும் வசதி மற்றும் எளிதில் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
எனவே தாவர புரதங்கள் இங்கே ஒரு பெரிய பங்களிப்பை வழங்கலாம். ஏனென்றால் இவற்றில் பல வகைகள் கிடைப்பது மட்டுமல்லாமல் அவை விலை மலிவாகவும் உள்ளன.
எல்லா தாவர புரதங்களும் முழுமையான ஆதாரங்களாக இல்லை என்றாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாவர அடிப்படையிலான உணவுகளின் சரியான கலவையானது பரிந்துரைக்கப்பட்ட தேவையை பூர்த்தி செய்ய முடியும். உதாரணமாக, ஒவ்வொரு உணவிற்கும் ஒருவர் 'தட்டில் கால் பகுதியை புரதத்தைக் கொண்டு நிரப்ப வேண்டும் என வழிகாட்டப்பட வேண்டும்.
இது பருப்பு வகைகள் அல்லது சோயாபீன்ஸ் மற்றும் தானியங்களின் கலவையாக இருந்தாலும் சரி, அல்லது தாவர அடிப்படையிலான பால், வெண்ணெய் மற்றும் பச்சை இலை புரதச்சத்து நிறைந்த காய்கறிகளுக்கு கூடுதலாக தினமும் கொட்டைகள் உட்கொள்வதாக இருந்தாலும் சரி.
எளிதில் கிடைக்கும் தாவர புரதங்கள் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு பொருளாதார நிலைத் தன்மையை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவை குறைந்த கார்பன் தடம் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது, இதனால் காலநிலை மாற்றத்தின் நீண்டகால விளைவுகளைத் தணிக்கும்.
தாவர அடிப்படையிலான புரதச்சத்து நிறைந்த உணவை மிகவும் எளிதில், மலிவு விலையில் கிடைக்க செய்வதோடு, பருப்பு வகைகள், தானியங்கள், நட்ஸ் ஆகியவற்றை பொது விநியோக அமைப்பு (ரேஷன் கடைகள்) மூலம் மானிய விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது மிகவும் தேவையான ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்கும்.
ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள ஒரு நேரத்தில், இந்தியாவின் மக்கள் தொகையில் பெருகிவரும் ஒரு பகுதியினர், தாவர அடிப்படையிலான உணவுகளை மையமாகக் கொண்ட ஒரு 'பிளெக்சிபில்' (flexible) உணவை ஆராய்வதோடு, உடல்நலம் அல்லது கலாச்சார காரணங்களால் அவ்வப்போது இறைச்சிகளைச் சேர்க்கின்றனர். பல்வேறு புரதச்சத்து நிறைந்த உணவு மூலங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரியசெய்வது மிக முக்கியமானது.
தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் இந்தியாவின் புரத உட்கொள்ளலை தக்க வைத்திருக்கலாம் என்றாலும், நல்ல தரமான, போதுமான புரதத்தை உட்கொள்ளும் விதத்தில் இன்னும் ஏதோ தவறு இருக்கிறது. உண்மை என்னவென்றால் - தாவர புரதங்கள் இந்தியாவின் புரதக் குறைபாட்டிற்கு விடை அளிக்கும்.
ஏனென்றால், ஆரோக்கியம் என்பது செல்வம், ஆரோக்கியமான சமூகம் மட்டுமே ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.