Kathir News
Begin typing your search above and press return to search.

"டாஸ்மாக்'கை மூடுங்கள் இல்லையேல் பேரழிவு ஏற்படும்" - தமிழக அரசை எச்சரிக்கும் டாக்டர்.ராமதாஸ்!

டாஸ்மாக்கை மூடுங்கள் இல்லையேல் பேரழிவு ஏற்படும் - தமிழக அரசை எச்சரிக்கும் டாக்டர்.ராமதாஸ்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 April 2021 2:00 AM GMT

இனியும் தாமதிக்காமல் இதனை உடனே செய்யுங்கள் இல்லையேல் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசை பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூடும்படி அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு மதுக்கடைகள் முக்கியக் காரணமாக உள்ள நிலையில், அவற்றை மூட ஆணையிட்டது மிகச்சிறந்த நடவடிக்கையாகும். புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை மது வணிகம் மூலமாகத் தான் பெருமளவில் வருவாய் கிடைக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாவிட்டால் அரசு நிர்வாகத்தை நடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் என்றாலும் கூட, அனைத்து வகையான மதுக்கடைகளையும் புதுவை அரசு மூடியிருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும்.

அதேபோன்ற நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும்; மதுக்கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக மாலை நேரங்களில் கூடும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாகும். அந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் எளிதாக அங்கு இருப்பவர்களைத் தொற்றிக் கொள்ளும். இது தவிர்க்கப்பட வேண்டும். மதுக்கடைகளில் கூட்டம் கூடுவது மட்டுமே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருவதற்கான காரணம் இல்லை. மாறாக, கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும், அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும். அதன்மூலம் நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமின்றி, ஏழைகள் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக குடிகொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News