"அட போதும் வீட்டுக்கு போங்கப்பா" என உடன்பிறப்புகளுக்கு வீட்டிற்கு செல்ல அறிவுரை வழங்கிய ஸ்டாலின் - தோல்வி சலிப்பின் உச்சமா?

By : Mohan Raj
தேர்தல் காலத்தில் முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் ஓய்ந்த பின்று சில நாட்களில் தேர்தலை முடித்துவிட்டு தத்தம் வேலைகளை பார்க்க சென்றுவிடுவர். பதவியில் இருக்கும் அரசியல்வாதி என்றால் தன் பதவிக்குறிய பணியையும், பதவியில் இல்லாத எதிர்கட்சி என்றால் தன் கட்சி பணியையும் பார்க்க சென்றுவிடுவர். ஆனால் தற்காலங்களில் தேர்தல் முடிந்தால்தான் சில கட்சியினருக்கு வேலையே துவங்குகிறது.
அதிலும் குறிப்பாக தி.மு.கவினருக்கு ஓவர் டைம் போட்டு ட்யூட்டி பார்ப்பது போன்று வாக்கு இயந்திரத்தை காப்பாத்துகிறேன் என்ற பெயரில் 'ஸ்டாராங்க் ரூம்' வாசலில் படுத்தே கிடப்பது. கண்டெய்னர் போன்ற வாகனம் கண்ணில் பட்டால் அதனை திறந்து காட்டும் வரையில் விடாமல் துரத்துவது, அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் டிஷ் ஆன்டனாவை கூட அடிப்படை ஞானம் இல்லாமல் அகற்ற சொல்வது, இங்க ஏன் "வை பை" வைத்தீர்கள் என தேர்தல் ஆணையம் அதிகாரிகளை கேள்வி கேட்டு திக்குமுக்காட செய்வது (இணையம் இல்லை என்றால் நாங்க எப்படி வேலை செய்வது என அவர்கள் புலம்பிகொண்டே சென்றது வேறு விஷயம்).
இப்படி கடந்த 3 மாத காலமாக ஓய்வறியாமல் உழைத்த உடன்பிறப்புகளை "வீட்டுக்கு போங்கப்பா" என்கிற ரீதியில் அறிவுரை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும், வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம்.
இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம். நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது" என அறிவுரை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்னும் இரு தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்த அறிவிப்பால் உடன்பிறப்புகள் குழம்பியுள்ளனர். "இனிமே இருந்து என்ன ஆக போகுது வீட்டுக்கு போங்கப்பா" என்கிற ரீதியிலான வெறுப்பு அறிவிப்பா அல்லது "நாம் வெற்றி பெறுவோம்" என்கிற நம்பிக்கை அறிவிப்பா என?
இதில் "நாம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கை அறிவிப்பு என்றால் இத்தனை நாளா அந்த நம்பிக்கை இல்லையா ஸ்டாலினுக்கு என்று வேறு உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. "எப்படியோ ஆளை விட்டால் சரி"என உடன்பிறப்புகள் வீடுகளை நோக்கி ஓட துவங்கிவிட்டனர்.
