தமிழக சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்!

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 33 அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தத்தம் துறைகளில் அமைச்சர்கள் பொறுப்பை ஏற்று செயல்பட துவங்கினர்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் 16'வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் 2021 ஆம் ஆண்டு மே திங்கள் 11'ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் கூட்ட அரங்கத்தில் தொடங்க உள்ளது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயராக கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழக சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.