மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் - தமிழகத்தில் திராவிட கட்சிகள் போல் இறங்கி அடிக்க துவங்கும் பா.ஜ.க!

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் போன்று இறங்கி அடித்து ஆட துவங்கியுள்ளது தமிழக பா.ஜ.க.
தமிழகத்திற்கு ஓரே கட்டமாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், தி.மு.க 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அ.தி.மு.க 65 இடங்களை கைப்பற்றியது. அதில் பா.ஜ.க 4 இடங்களை கைப்பற்றியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் சட்டமன்றம் செல்கின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான கமல்ஹாசனை தோற்கடித்து வானதி வெற்றி பெற்றார். 6 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்று, 75 வயதில் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.காந்தி.
மேலும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி, நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வெற்றிபெற்ற நான்கு எம்.எல்.ஏ.,க்களையும் வெற்றிபெற வைத்த மாவட்ட தலைவர்களுக்கும் இன்னோவா காரை வாங்கிக் கொடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.