எல்லா மாநில சம்பவங்களுக்கும் குரல் கொடுக்கும் "கோவக்கார சித்தார்த்" தமிழகத்தில் நடப்பவைகளுக்கு அமைதியாக இருப்பது ஏன்?
By : Mohan Raj
நாடாளும் அரசுகளை நடிகர்கள் விமர்சனம் செய்வது தற்பொழுது பேஷனாக மாறிவிட்டது. அதிலும் படங்கள் நல்ல முறையில் வெற்றி கண்டு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் நடிகர்கள் கூட தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கின்றனர். ஆனால் யாராவது தயாரிப்பாளர் நமக்கு கிடைக்கமாட்டார்களா என ஏங்கும் நடிகர்கள் கூறும் யோசனைகள், விமர்சனங்கள் இருக்கிறதே அது தற்பொழுது அதிகமாகிவிட்டது. இந்த திறமையை கேமரா முன் நடிப்பில் காண்பித்திருந்தால் கூட குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு படமாவது தலைகாட்டியிருக்க முடியும்.
அந்த வகையில் நடிகர் சித்தார்த் இவரை நடிகர் சித்தார்த் என கூறுவதை விட திரையுலகை சேர்ந்த சித்தார்த் என கூறுவது பொருத்தமாக இருக்கும். இவர் கடந்த மாதமெல்லாம் மத்திய அரசை குறை கூறுவதும், மாநில அரசை விமர்சிப்பதும், "வேக்ஸின் எங்கடா டேய்" என ட்விட்டரில் கேட்பதையும் முழு நேர வேலையாக வைத்திருந்தார். போதாக்குறைக்கு பிற மாநில முதல்வரை குறிப்பிட்டு "பொய் சொன்னால் அறை விழும்" என என்னமோ பொய் பிடிக்காத மானுடன் மாதிரி பொங்கியிருந்தார்.
ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சித்தார்த் அவர்களின் கண்ணுக்கு தென்படவே மாட்டேன் என்கிறது. இங்கு நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தெரியவில்லை, மருத்துவமனை வாயிலில் காத்திருந்து இடம் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் நிலை தெரியவில்லை, இறந்த பிறகு சடலத்தை எரிக்க இடம் கிடைக்காமல் அல்லல் படும் நிலை தெரியவில்லை இப்படி ஏதும் தெரியாமல் இருக்கிறார் என்ன அதிசயமோ? கடந்த மாதம் புடைத்த இவரது நரம்புகள் தற்பொழுது காணவில்லை.
போதாக்குறைக்கு தற்பொழுது தமிழக அரசு நன்கொடை அளித்து உதவிக்கரம் நீட்டலாம் என வெளிப்படையாகவே கேட்கும் நிலை வந்துவிட்டதை அறிந்தாவது சிறுது உதவியாவது செய்திருக்கலாம். மத்திய அரசின் நிதிக்கு அனுப்பாதீர்கள் நல்ல உதவும் ஆட்களுக்கு நிதியை அனுப்புங்கள் என கூறிய சித்தார்த்'தின் கண்களுக்கு தி.மு.க அரசு உதவும் அரசாக தெரியவில்லையா?