எதிர்கட்சியாக இருக்கும் போது ஏளனம் பேசிவிட்டு தற்பொழுது நிவாரணம் வழங்கும் ரேசன் கடைகளில் விளம்பரம் செய்யும் தி.மு.க!

அரசியலில் ஆட்சியில் இல்லாத பொழுது அரசியல்வாதிகள் எதை பேசுகின்றனரோ, எவ்வாறு விமர்சனம் செய்கின்றனரோ அதை அப்படியே ஆட்சிக்கு வரும் போது பின்பற்ற வேண்டும். மாறாக ஆட்சியை பிடிக்க மக்கள் மத்தியில் ஆயிரம் கருத்துக்களை பேச வேண்டியது மாறாக ஆட்சிக்கு வந்தவுடன் அதை அப்படியே காற்றில் பறக்கவிட்டு தன் இஷ்டப்படி ஆடவேண்டியது என இருப்பது அறம் பேசும் அரசியல்வாதிகளுக்கு அழகல்ல.
அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க எதிர்கட்சியாக இருந்தது. சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்தில் ஆளும் அ.தி.மு.க அரசை விமர்சித்து ஏகபோகத்திற்கும் கருத்துக்களை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
உதாரணமாக நிவாரண பொருள் மக்களுக்கு விநியோகம் செய்வதை அ.தி.மு.க நிர்வாகிகள் விளம்பரம் செய்ததை படம் பிடித்து "பார்த்தீர்களா மக்கள் அவஸ்தையில் இருக்கும் போது இவர்கள் இவ்வாறு விளம்பரம் தேடுகின்றனர்" என்கிற ரீதியில் விமர்சனத்தை முன்வைத்து வந்தனர் தி.மு.க'வினர்.
ஆனால் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் தி.மு.க'வினர் ரேசன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணம் அளிக்கும் திட்டத்திற்கு ப்ளக்ஸ் வைத்து, ரேசன் கடைகளில் தி.மு.க கொடிகளை கட்டி, சில தி.மு.க கரை வேட்டிகளை ரேசன் கடைகளில் நிற்க வைத்து, இன்னும் சொல்லப்போனால் பேரிடர் காலத்தில் மக்களுக்கு விரைந்து சேவை செய்ய வேண்டிய அமைச்சர்கள் கூட ரேசன் கடைகளில் நிவாரண பணம் தர நிற்கின்றனர்.
கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த தி.மு.க என்னவெல்லாம் குறை சொன்னதோ அதை அப்படியே இம்மியளவும் மாறாமல் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் போது செய்து வருகிறது. இது யாரை ஏமாற்றும் செயல்?