"கொரோனோ உயிரிழப்புகளை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை வெளியிடுங்கள்" - தமிழக அரசை சாடும் ராமதாஸ்!

By : Mohan Raj
"தமிழ்நாடு கொரோனோ பரவலில் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது, கொரோனா உயிரிழப்புகளை மறைக்காமல், உண்மையான எண்ணிக்கையை வெளியிடுங்கள்" என மருத்துவர்.ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டுவரும் நிலையில், மற்றொருபுறம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டும் கண்டறியப்படாமலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டதாகவும், அதுகுறித்த செய்திகள் மறைக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.
கொரோனா இறப்புகளை அரசே மறைப்பது அறத்தை மீறிய செயலாகும். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நேற்று (14.05.2021) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 297 பேரும், 12 ஆம் தேதி 293 பேரும் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அந்த நேரங்களில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்குக் காட்டப்படும் மாவட்டங்களில் தருமபுரியும் ஒன்று. அங்கு கடந்த 8ஆம் தேதி மூவரும், 11ஆம் தேதி ஒருவரும், 13ஆம் தேதி மூவரும் மட்டுமே உயிரிழந்ததாகவும், 9, 10, 12, 14 ஆகிய நாட்களில் ஓர் உயிரிழப்பு கூட இல்லை என்றும் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுடுகாடுகளில் உடல்களை எரிக்க முடியாத நிலை இருப்பதாகவும், பலரும் உடல்களை எரிப்பதற்காக காத்துக்கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 12ஆம் தேதி பிற்பகலுடன் முடிவடைந்த 36 மணி நேரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகமே தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிக்கையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 11ஆம் தேதி மட்டுமே ஒருவர் உயிரிழந்தார்; 12ஆம் தேதி எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில் எந்தத் தகவலை உண்மை என எடுத்துக்கொள்வது என தெரியவில்லை.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது சென்னையில் 236 கரோனா உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்படாதபோது அதற்கு எதிராக கடுமையான கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இப்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின் அவரது முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே தகவல்களை மறைக்க வேண்டாம்; உண்மையாக தகவல்களைக் கூறுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
அதன்பிறகும் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவது ஏன் என்பது தெரியவில்லை. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பான செயலாகும்." என மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
