"பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அதிகார பித்தம் தலைக்கேறி உளருகிறார்" - சத்குரு விவகாரத்தில் இந்து முன்னணி கடும் கண்டனம்!

By : Mohan Raj
நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேர் ராஜன் அதிகார பித்தம் தலைக்கேறி உளறுகிறார் என சத்குரு ஜக்கி வாசுதேவ் விவகாரத்தில் இந்து முன்னனியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதியாக அமைந்த தி.மு.க அமைச்சரவையில் நிதி அமைச்சராக பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பதவி ஏற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனை குறிப்பிட்டு இந்து முன்னனியின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "தேர்தல் முடிந்து புதிய அரசாக தி.மு.க பதவியேற்றுக் கொண்ட தருணம் நாட்டில் கொரானா இரண்டாம் அலை மக்களை சுனாமியாக தாக்கி அழித்துக் கொண்டிருக்கும்கொடுமையான காலகட்டம். இக் காலகட்டத்தில் அரசு எந்திரத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர் முதல் கடைக்கோடி கடைநிலை ஊழியர் வரை மக்களைக் காப்பாற்றுகின்ற வேலையில் முனைப்பு காட்ட வேண்டிய சூழ்நிலை
உள்ளது. ஆனால் தி.மு.க'வில் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. P.T.R. பழனிவேல் ராஜன் அவர்கள் அதிகார பித்தம் தலைக்கேறி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டி, தான் வகித்து வரும் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தி வருகின்றார்.
ஒரு அமைச்சர் பதவி என்பது அனைத்து மக்களுக்குமானது. அந்த அமைச்சர் பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபர் வெளியிடுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கண்ணியமாகவும், அடுத்தவர்களை புண்படுத்தாத வகையிலும், மதிக்கத்தக்க வகையிலும் இருக்க வேண்டும். ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள தமிழகத்தின் நிதியமைச்சர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்.
கோடிக்கணக்கான மக்கள் தங்களது குருவாக ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களை அவன் / இவன் என்று ஏக வசனத்தில் அவமரியாதையாக பேசிய காணொளிக் காட்சியை சில மாதங்கள் முன்பு மக்கள் அனைவரும் ஏற்கனவே கண்டுள்ளனர். தற்போது மீண்டும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், இழிப்பதும் - பழிப்பதுமே அவர் மேற்கொள்ளும் தலையாய வேலையாக இன்றைக்கு இருக்கிறது" என குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.
