Kathir News
Begin typing your search above and press return to search.

"ஊரடங்கை செயல்படுத்துவதில் தி.மு.க அரசு படுதோல்வி" - மரு ராமதாஸ் காட்டம்!

ஊரடங்கை செயல்படுத்துவதில் தி.மு.க அரசு படுதோல்வி - மரு ராமதாஸ் காட்டம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 May 2021 8:15 AM IST

"ஊரடங்கை செயல்படுத்துவதில் தி.மு.க அரசு தோல்வியடைந்து விட்டது" என பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நேற்று 1816 அதிகரித்து, 34,875 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக பகுதி நேர ஊரடங்கும், 11 நாட்களாக முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்தும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுவது குறித்த சந்தேகங்களைத் தான் ஏற்படுத்துகிறது.


தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 16-ஆம் தேதி முதல் குறையத் தொடங்கியது. 16-ஆம் தேதி 477, 17-ஆம் தேதி 106, 18-ஆம் தேதி 16 என்ற விகிதத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதனால், கொரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை எழுந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1816 அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி கொரோனா தொற்று ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடந்த 10 நாட்களில் இது தான் முதல் முறையாகும். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பயனளிக்கும் வகையில் உறுதியாகவும், கடுமையாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அதே மே 10-ஆம் தேதி தான் கர்நாடகத்திலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. கேரளத்தில் அதற்கு இரு நாட்கள் முன்பாக மே 8-ஆம் தேதி முழு ஊரடங்கு செயல்பாட்டுக்கு வந்தது. கர்நாடகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் தினசரி பாதிப்பு 47,930 ஆக இருந்தது. நேற்று அந்த எண்ணிக்கை 34,281 ஆக குறைந்து விட்டது.


ஊரடங்கு என்பது அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வர முடியாத நிலையை உருவாக்குவது தான். அத்தகைய ஊரடங்கை செயல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஊரடங்கை உறுதியாக செயல்படுத்த விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது என தெரியவில்லை. ஊரடங்கு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் பேரழிவை ஏற்படுத்தும். கொரோனா பாதிப்புகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், ஊரடங்கு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் மிகவும் உறுதியாக தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; நான் மீண்டும், மீண்டும் கூறி வருவதைப் போல தேவைப்பட்டால் துணை இராணுவத்தை அழைக்க வேண்டும். அதன்மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்" என பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News