மருத்துவ பணியாளர் போராட்டம், தீக்குளிக்க முயற்சி - ஸ்டாலின் மதுரை விஜயத்தில் களேபரம்!

முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய மதுரை விஜயத்தின் போது 300-க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், அதில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் முறையாக சென்னை அல்லாத இதர தமிழக நகரங்களுக்கு விஜயம் செய்தார், அதில் ஒரு பகுதியாக நேற்று மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.
அப்பொழுது அவர் வருவதை அறிந்து கொண்ட செவிலியர்கள், லேப் டெக்னிசியன்கள், முதல்வர் காப்பிட்டு திட்ட ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் மனுவாக அளிக்க அங்கு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். திடீரென 300 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பதற்றமடைந்த காவல்துறையினர் முதல்வர் உள்ளே இருக்கும் சமயத்தில் ஏதும் பிரச்சினை ஆகி விடக்கூடாது என்பதற்காக அவர்களை கலைந்து போக கூறியுள்ளனர்.
அதற்கு அங்கு கூடியிருந்த மருத்துவ உதவி பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் நேரில் மனுவாக அளித்த பிறகே கலைந்து செல்வோம் என கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த கூட்டத்தில் ஒரு முதியவர் ஒருவர் முதல்வரை சந்திக்க அனுமதி வேண்டி கையில் டீசல் கேனுடன் வருகை தந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை தடுத்த போலீசார் அந்த முதியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த கலவரத்தை தொடர்ந்து அங்கு வந்த ஸ்டாலின் வெறும் 3 நிமிடம் மட்டுமே இருந்துவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார். மருத்துவ உதவி பணியாளர்களை கூட பார்க்கவில்லை, அவர்கள் கோரிக்கை மனுவையும் வாங்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் வரும் வேளையில் 300 பேர் கோரிக்கையுடன் அவரை பார்க்க போராட்டத்தில் ஈடுபட்டதும், ஒருவர் தீக்குளிக்க முயன்றதும் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source - ஜூனியர் விகடன்