கொரோனோவை கட்டுபடுத்துவதில் அ.தி.மு.க ஆட்சி போல் செயல்படுங்கள் - ஸ்டாலினுக்கு எடப்பாடி அறிவுரை!

இந்தியாவிலேயே கொரோனோ தொற்றில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதால், "கொரோனாவை கட்டுப்படுத்த அ.தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போல தற்போது எடுக்க வேண்டும்" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுகப்பு நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தினமும் 35,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்துவிட்டால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரித்து 24 மணி நேரத்தில் முடிவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போல தற்போது எடுக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.