Kathir News
Begin typing your search above and press return to search.

"கிராமங்களை கவனியுங்கள்" - மரு ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை!

கிராமங்களை கவனியுங்கள் - மரு ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை!

Mohan RajBy : Mohan Raj

  |  28 May 2021 3:45 AM GMT

"தடுப்பூசி குறித்து பரப்பப்படும் ஆதாரமற்ற பொய்கள், அச்சமூட்டும் தகவல்கள் போன்ற காரணங்களால் கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்தியுள்ள அச்சம் தான் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராததற்கு காரணம்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலை உருவாகாமல் தடுக்கவும் பொதுமக்களில் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் 10 விழுக்காட்டினருக்குக் கூட தடுப்பூசி போடப்படாதது வருத்தம் அளிக்கிறது.

இந்தியா முழுவதும் நேற்று வரை 19.83 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் மராட்டியத்தில் மட்டும் 2.13 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 1.70 கோடி, ராஜஸ்தானில் 1.63 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அவற்றில் பாதிக்கும் குறைவாக 78.87 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இது தமிழக மக்கள்தொகையில் 10 விழுக்காட்டுக்கும் குறைவு

இதே வேகத்தில் தடுப்பூசி போடப்பட்டால், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க குறைந்தது 4 ஆண்டுகளுக்கு மேலாகி விடும்.

இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியமானது ஊரக மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஆகும். நகர்ப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள போட்டி நிலவும் சூழலில் கிராமப்பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 15.50% வீணாகிறது என்பதும், தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதும் இதை உறுதி செய்கிறது.

தேவைப்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்கவும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் தமிழக அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News