"நிதியளித்தால் திருக்குறள் புத்தகம்" - சிறுவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்!

"கொரோனா நிதி வழங்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் அனுப்பி வைக்கப்படும்" என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனோ இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 வாரமாக பொது முடக்கம், நிவாரண நிதி திரட்டல் என தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிவாரண நிதியளித்து வந்தனர். இது மட்டுமல்லாமல் அவ்வபோது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர், சிறுமியர்கள் வேறு சைக்கிள் வாங்க வைத்திருந்த பணம், உண்டியல் பணம், பென்சில் வாங்க வைத்திருந்த பணம், நோட் வாங்க வைத்திருந்த பணம் என தங்கள் சேமிப்புகளை வேறு அவ்வபோது மீடியா முன்பு நிவாரண நிதியாக அளித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் வைபோகம் வேறு நடந்து வந்தது.
பதிலுக்கு தி.மு.க'வின். புதிய விழுதுகள் சிலர் உடனடியாக மீடியா முன்பு அந்த சிறுவர்களுக்கு சைக்கிள், பரிசு பொருள்கள் என திருப்பி கொடுத்து செய்திகளாக வலம் வந்தனர். தற்பொழுது இந்த சிறுவர் விளையாட்டு போதும் என தமிழக முதல்வர் நினைத்துவிட்டார் போலும்! இதன் தொடர்ச்சியாக ஓர் அறிவிப்பையும் நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், "தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறுவர்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூல் ஒன்று அனுப்பிவைக்கப்படும் என்பதைக் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அற உணர்வு
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு
என்ற அய்யன் திருவள்ளுவரின் குறள்நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதர்களை நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அன்னைத் தமிழ் மண்ணில் அற உணர்வு தழைத்தோங்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
கொரோனோ இரண்டாம் அலையில் வேலைகள் நிறைய உள்ளது சிறுவர்கள் விளையாட வேண்டாம் என முதல்வர் முடிவெடுத்து நல்ல முயற்சி.