"இந்தியாவின் சொத்தான இளைஞர்களை புகைப்பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்" - தொலைநோக்குடன் அரசுக்கு கோரிக்கை வைத்த அன்புமணி!

"இந்தியாவின் சொத்துகள் இளைஞர்கள்தான். ஆனால், புகைப்பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம்" என புகைப்பழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசிற்கு தொலைநோக்காக பா.ம.க'வின் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அளவிட முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் சில நன்மைகளையும் விதைத்திருக்கிறது. புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களில் 60 சதவீதத்தினர் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கொரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
புகை பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 31'ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் புகை பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமையாகும். இளைஞர்கள் இந்தியாவின் சொத்துக்கள், இந்தியாவில் புகை பிடிப்பவர்களில் 12 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர்.
அவர்களுக்கு மாற்றாக 12 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து மறைமுக விளம்பரங்களை புகையிலை நிறுவனங்கள் செய்கின்றன. இந்தியாவின் சொத்துகள் இளைஞர்கள்தான். ஆனால், புகைப்பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம்.
அதை தடுக்கும் நோக்கத்துடன் புகையிலைக்கும், புகைப்பழக்கத்துக்கும் அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த சேவையை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் ''கைவிட உறுதியெடுங்கள்'' என்ற முழக்கத்தை முன்னெடுக்க அரசுகள் முன்வர வேண்டும் என அவர் அறிக்கையில் தொலைநோக்குடன் குறிப்பிட்டுள்ளார்.