"லட்சத்தீவின் வரைவு சட்டங்கள் மக்கள் கருத்து கேட்ட பின்பே அமலுக்கு வரும்" - அமித் ஷா உறுதி!
By : Parthasarathy
லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேல், மாட்டிறைச்சிக்கு தடை, மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இத்துடன் லட்சத்தீவு மேம்பாடு மற்றும் சமூக விரோத செயல்களுக்கு தடை விதிப்பது தொடர்பான இரு வரைவு சட்டங்களுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. லட்சத்தீவில் நிலம் கையகப்படுத்துவது, சமூக விரோதிகளை ஓராண்டு வரை சட்டப் பாதுகாப்பின்றி சிறை வைப்பது போன்றவற்றுக்கு வழி வகுக்கும் இந்த வரைவு சட்டங்கள் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசல் நேற்று சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, முகமது பைசல் செய்தியாளர்களிடம் கூறியதாவது "தற்போது பரிசீலனையில் உள்ள வரைவு சட்டங்கள் குறித்து, லட்சத்தீவில் மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பின்பே சட்டம் அமலாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என, அமித் ஷா உறுதி அளித்துள்ளார். பிரபுல் படேலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அமித் ஷாவிடம் தெரிவித்தேன்" என்று அவர் கூறினார்.