"பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை காலத்தை கழித்துள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்" - திருமாவளவனின் பலே கோரிக்கை!

"பத்து ஆண்டுகளுக்கு மேல் தங்களின் தண்டனை காலத்தை கழித்துள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஜூன்-3 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாள். இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கொள்கை வாரிசாக தமிழக முதல்வராக இருந்து தி.மு.க'வையும், தமிழக அரசையும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் மறைந்த கலைஞர் அவர்களுக்கு, மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3 அன்று பத்தாண்டுகளுக்கும் மேல் நெடுங்காலமாக சிறைப்பட்டு இருப்போர், அனைவரையும் மானித நேய அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் தங்களின் தண்டனை காலத்தை கழித்துள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் வயது மூப்படைந்த, கடுமையான நோய்க்கு ஆட்பட்டோர், வழக்குகளை நடத்த பொருளாதார வலிமையன்றி பல ஆண்டுகளாக உள்ளேயே கிடக்கும் விசாரணை கைதிகள், பெண் கைதிகள் போன்றோரையும், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களையும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்" என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.