"நாங்கதான் தடுப்பூசி டோக்கன் கொடுப்போம், போய் புகார் குடுங்க பயமில்ல!" - தி.மு.க கோவை அராஜகம்!
By : Mohan Raj
கோவையில் தடுப்பூசி போடுவதற்கான டோக்கனை நாங்கள்தான் தருவோம் என தி.மு.க-வினர் அடம்பிடித்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் கொரோனோ அலையில் அதிகம் பாதிப்புக்குள்ளானது கோவை மண்டலம்தான், புதிய தொற்றாளர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் என கோவையின் பாதிப்பு மற்ற மண்டலங்களை விட அதிகம். இந்த நிலையில் கோவை குறிச்சி பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த தி.மு.கவினர், "தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை நாங்கள்தான் விநியோகம் செய்வோம்" என்று கூறி மருத்துவ குழுவினரிடமும், மருத்துவர் முகுந்தன் என்பவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் தி.மு.க-வினரை வெளியேற்றினர். இதேபோல, வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த தி.மு.க சரவணம்பட்டி பொறுப்பாளர் அருள்குமார், "தடுப்பூசிக்கான டோக்கனை நான்தான் கொடுப்பேன். யார்கிட்ட வேணும்னாலும் புகார் கொடுத்துக்கோங்க. எனக்கு பயமில்லை" என்று கூறினார்.
இதனால், தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல, கோவையின் சில பகுதிகளில் தி.மு.க'வினர், நாங்கள்தான் டோக்கன் கொடுப்போம் என வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இதுபோன்று தி.மு.க-வினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவித்தனர்.