முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓ.பி.எஸ் : ஏன் தெரியுமா?

"எனது வேண்டுகோளை ஏற்றுகொண்டு நிறைவேற்றியிருக்கிறீர்கள் நன்றி முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களே!" என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் 27'ம் தேதி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டை விரிவுபடுத்த வேண்டும். பணி ஓய்வு மற்றும் விருப்ப பணி ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வு காலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்'' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைதொடர்ந்து போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பண பயன்களின் நிலுவைத்தொகையான ரூ.497.32 கோடியை, 2 ஆயிரத்து 457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் 6 போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகைக்கான காசோலையை நேற்று வழங்கினார்.
எனது வேண்டுகோளினை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை 2-6-2021 அன்று நிறைவேற்றியிருக்கிற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 3, 2021
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது வேண்டுகோளை ஏற்று, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிற முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.