பெருமாள் கோவில் வாசலில் பேனர் வைத்து அசைவ பிரியாணி வழங்கிய தயாநிதி மாறன்!
By : Mohan Raj
ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோவில் வாசலில், கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் உள்ளிட்டோர் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணியை மக்களுக்கு வழங்கியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி மறைந்த தி.மு.க தலைவரும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தகப்பனாருமாகிய மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஊரடங்கிலும் தி.மு.க'வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடினர்.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில், 118-வது கிழக்கு வார்டில் அமைந்துள்ள, சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் பெருமாள் கோவில் உள்ளது. இதன் வாசலில் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, சமீபத்தில், அப்பகுதி மக்களுக்கு, சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இதனை மக்களை கூட்டி, பேனர்கள் வைத்து தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் மற்றும் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ எழிலன் ஆகியோருடன் உடன்பிறப்புகளை புடைசூழ கொரோனோ ஊரடங்கு என்பதை கூட மறந்து கொண்டாடினர்.
பெருமாள் கோவில் முன் அசைவ உணவை கூட்டமாக வைத்து தி.மு.க-வினர் வழங்கியது அப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் மற்றும் பல ஹிந்து இயக்க தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் பக்தியுடன் வழிபடும் கோவில் என்றும் பாராமல், கொரோனோ ஊரடங்கு காலம் என்று கூட நினைவில்லாமல் தி.மு.க-வின் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆகியோர் அராஜகமாக நடந்துகொண்டது அங்குள்ள மக்களை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
Source - தினமலர்