தி.மு.க-வின் 'ஒன்றிய அரசு' என்ற சொல்லுக்கு பின்னணியில் பிரிவினைவாதம்? தலைவர்கள் குற்றச்சாட்டு!
By : Parthasarathy
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்து ஒரு மாதம் மட்டுமே முடிந்த நிலையில், அந்த கட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பிரிவினையை தூண்டும் விதமாக பேசி வருவது மக்கள் மற்றும் கட்சி தலைவர்களிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக "மத்திய அரசை ஒன்றிய அரசு" என தி.மு.க நிதி அமைச்சர் தியாகராஜன் பேசி வரும் விவகாரத்தில், ஏதேனும் சதி இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலமாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசை "ஒன்றிய அரசு" எனக் குறிப்பிட்டு வருவதன் பின்னால் திராவிட நாடு என்ற கோரிக்கை ஒளிந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டை, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பி உள்ளார். அது மட்டுமின்றி நிதி அமைச்சர் தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிட்டு, 'சட்டத்தில் அப்படி தான் இருக்கிறது' என விளக்கம் அளித்தார். அவரை தொடர்ந்து தி.மு.க வின் தலைவர்கள் பலர் குறிப்பாக தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே பல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையை சேர்ந்த நாகராஜன், தன் முகநுால் பக்கத்தில் மத்திய அரசு அளித்த தடுப்பூசி சான்றிதழில், நான்கு சிங்கம், அசோக சக்கரம் உள்ளடக்கிய மத்தியஅரசின் முத்திரையை எடுத்து விட்டு, அதில், தமிழக அரசின் கோபுர முத்திரையை மாற்றிவைத்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை, பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க பிரமுகர் நிலேஷ்ராம் அளித்துள்ளார்.
இது குறித்து, தமிழக பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் "நிதி அமைச்சர் தியாகராஜன் போன்றோரின் பிரிவினை பேச்சால் தற்போது, மத்திய அரசின் சின்னத்தை மாற்றும் அளவிற்கு சென்றுள்ளனர். தி.மு.க வினர் 'திராவிட மக்கள், ஒன்றிய உயிரினங்கள்' என பல திட்டங்கள் திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால் தி.மு.க வின் 1962ம் ஆண்டு பிரிவினை கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்ற சந்தேககம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை விசாரணை நடத்த வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.