"யார் எப்படி போன என்ன கஜானா நிரம்பினா போதுமா?" - ஸ்டாலினை வெளுக்கும் தினகரன்!

By : Mohan Raj
"யார் எப்படி போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும் என தி.மு.க அரசு நினைப்பது மோசமான செயல்பாடாகும்" என அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டி.டி.வி.தினகரன் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதலமைச்சர், அதற்கு நேர்மாறாக நோய்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றி துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படி போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்து கொள்வதும் மிகமோசமான செயல்பாடாகும். ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும்.
எனவே, கொரோனா நோய் தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
வரும் திங்கட்கிழமை முதல் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் மதுபானகடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
